மாவையின் முழக்கம் மாபெரும் கலக்கம்!

அதிசய உலகம்

so cute

மேலும்..

தமிழ் மக்களுக்கு எமது மக்களுக்கு நிரந்தரமானதொரு தீர்வைப் பெற்றுக்கோடுப்பதற்கு கொடுக்கவேண்டிய விலை எமது நாடாளுமன்ற ஆசனமாக இருந்தால், எமது மக்களுக்காக எம்மை நம்பி வாக்களித்து நாடாளுமன்றுக்கு அனுப்பியவர்களுக்காக தமது பிரதிநிதிகளாக எம்மைத் தெரிவுசெய்தவர்களுக்காக நாம் எமது நாடாளுமன்றக் கதிரையைத் தூக்கி எறிந்து பதவியைத் துறக்கவும் தயாராக உள்ளோம்.

இவ்வாறு தெரிவித்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா.
யாழ். ஊடக அமையத்தில் நேற்றுமுன்தினம் நடந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் அவர்களின் கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே தமிழ்மக்களின் தலைவர் இந்தக் கருத்தை முன்வைத்திருக்கின்றார்.
நல்லாட்சி அரசை ஆட்சிப்பீடம் ஏற்றியவர்கள் தமிழர்கள்தாம். ஆனால், அந்த நல்லாட்சி அரசு ராஜபக்௸ குடும்பத்துக்குப் பயந்து தாம் ஆட்சியினின்றும் கவிழ்ந்துவிடுவோம் என்றெண்ணி இராணுவத்துக்கும் சிங்களக் கடும்போக்காளர்களுக்கும் வக்காலத்து வாங்குகின்றது.

தமிழ்த் தலைவர்கள் தமிழரசுத் தலைவர்கள் அன்றும் இன்றும் என்றும் பதவிகளுக்கும், கதிரைகளுக்கும், சுகபோகங்களுக்கும் ஆசைப்பட்டவர்கள் அல்லர் என்பதை மாவையின் கூற்று வெள்ளிடைமலையாகப் புலப்படுத்துகின்றது.

தந்தை செல்வநாயகத்தின் காலத்தில் தளபதி அமிர்தலிங்கத்தின் காலத்தில் சிங்கள கொடுங்கோல் ஆட்சியாளர் ஜே.ஆரின் ஆட்சிக் காலத்தில் எமது மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காகப் பதவிகளைத் துறந்தவர்கள் எமது தமிழ் தமிழரசு தலைவர்கள்.
1949 ஆம் ஆண்டு தற்போது கடும்போக்கு அரசியல் நடத்துகின்ற சைக்கிள் குமாரின் பேரன் ஜி.ஜி.பொன்னம்பலம், டி.எஸ்.சேனநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் அமைச்சுப் பதவிகள்மேல் மோகங்கொண்டு மலையக மக்களின் வாக்குரிமைப் பறிப்புக்கு எதிராகக் வாக்களித்தபோது, பதவிகளைத் தூக்கிவீசிவிட்டு சமஷ்டிக் கட்சியை ஆரம்பித்தார் தந்தை. தந்தையின் வழியில் வந்த தனையன் இன்று அதே கருத்தைப் பீற்றியிருக்கின்றார்.

இன்னுமொரு விடயத்தை இங்கு குறிப்பிட்டாகவேண்டும். தந்தை செல்வாவின் மறைவுக்குப் பின்னர் காங்கேசன்துறைத் தொகுதி நாடாளுமன்ற ஆசனம் மாவை சேனாதிக்கே வழங்கப்பட்டது. ஆயினும், வட்டுக்கோட்டையில் தளபதி அமிர்தலிங்கம் போட்டியிடமுடியாத நிலைமை ஒன்று ஏற்பட்டபோது, அண்ணன் மாவை தனக்கு ஒதுக்கப்பட்ட காங்கேசன்துறைத் தொகுதியை தளபதி அமிர்தலிங்கத்துக்கு மனமுவந்து வழங்கி, அவரை அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக்கி, தனது பெருந்தன்மையை வெளிப்படுத்திய பெருந்தகை.
அந்த வழியில் வந்த மாவை இன்று தமிழ் மக்களுக்காக அவர்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடைப்பதற்கு தன(ம)து நாடாளுமன்ற ஆசனம்தான் விலையாக அமையுமானால் அதனைச் செய்யவும் தாம் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தமை உண்மையில் அவர் தமது மக்களின் தீர்வு விடயத்தில் எவ்வளவு கரிசனையுடையவர் என்பதைத் துலாம்பரமாகக் காட்டுகின்றது.

மாவை சேனாதியின் இந்த முழக்கம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்திள்ளது. இன்னொரு விடயத்தைம் அவர் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு தாம் தமது பதவிகளைத் துறக்கும்போது சர்வதேசத்தின் ஆலோசனை மற்றும் ஆதரவுடனேயே மேற்கொள்ள உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இன்றைக்கு இலங்கை சர்வதேசத்தின் பொறியில் அகப்பட்டு நசுக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. ஆட்சியாளர்கள் சர்வதேசத்துக்கு ஒருகதையும் சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கும் இராணுவத்துக்கும் ஒரு கதையும் என்று கதைவிட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
சர்வதேசத்தின் இராஜதந்திரம் தொடர்ந்தும் ஒரு நிலைத்துடையதாகாது. புலிகளை அழிக்க மஹிந்தவுடன் கூட்டுச்சேர்ந்தது. மஹிந்தவை ஆட்சிப் பீடத்திலிருந்து விரட்டி, அவரை யுத்தக்குற்றவாளியாக தம்முன்நிறுத்த சந்திரிகா, ரணில்,சுமந்திரன், மைத்திரி ஆகியோரைப் பயன்படுத்தி மைத்திரியை ஆட்சிப்பீடமேற்றியது.

சர்வதேசம் மைத்திரியை ஆட்சிப்பீடம் ஏற்றியமைக்கு இரண்டு காரணங்கள். ஒன்று மஹிந்தவை வீட்டுக்கு அனுப்புதல். அது நடந்தாகிவிட்டது.

அடுத்த இரண்டாவது பாரிய கடமை மஹிந்தவையும் யுத்தக்குற்ற மீறல்களில் ஈடுபட்ட படைத்தரப்பையும் குற்றக்கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்கல். இந்த விடயத்தில்தான் சிக்கல் இருக்கின்றது. மைத்திரி சர்வதேசத்தின் கோரிக்கைக்குக் கட்டுப்பட்டு ஆட்சிப் பீடமேறியவர், தற்போது ஆட்சி அதிகாரத்தின் மீது ஏற்பட்ட மோகத்தால் பதவியை ருசித்து அதன் சுவையை உணர்ந்தமையால் தொடர்ந்தும் தான் ஆட்சிக் கதிரையில் அமரவேண்டும் என்பதற்காக அதற்கு பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்களின் வாக்குப் பலம் தேவை என்பதற்காக தடம்மாறுகின்றார் மைத்திரி. ஆனால், இந்த விடயத்தில் சர்வதேசம் உடும்புப்பிடி பிடித்துள்ளது.

எது எவ்வாறாயினும் ஒன்றுமட்டும் உண்மை. மாவை கூறியபடி அரசு தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது என்பதை உணர்ந்து பதவியைத் துறப்பாராகில் அவர் தமிழ் மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடிப்பார் என்பதும் மைத்திரி என்ன காரணத்துக்காக தான் அதிகாரத்துக்கு வந்தார் என்பதை மறந்து செயற்படுவாராகில் அவர் திட்டமிட்ட சர்வதேச வலையமைப்பூடாகக் கடாசிக் குப்பைக்கூடைக்குள் வீசப்படுவார் என்பதும் யதார்த்தமான உண்மைகள். சம்பந்தப்பட்டவர்கள் புரிந்தால் சரி.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்