லண்டன், யூஸ்ரன் ரயில் நிலையம் மூடப்பட்டதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்

மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்ட தீ பரவுகையை அடுத்து லண்டன் யூஸ்ரன் ரயில் நிலையத்தில் இருந்து புறநகரங்களை நோக்கிப் புறப்படும், ரயில் சேவைகள் அனைத்தும் இன்று மாலை ரத்துச் செய்யப்பட்டன.

சௌத் ஹம்ஸ்ரட் ரயில் வழித்தடத்தில் ஏற்பட்ட இந்த தீ பரவுகையால், மின்சாரத் தடை ஏற்படுத்தப்பட்டது. இதனால் மாலை வேளையில் தமது பணி முடிந்து இருப்பிடங்களை நோக்கி செல்லமுற்றபட்ட 10 ஆயிரம் வரையிலான பயணிகள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டதாக பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் பாரிய  ரயில் நிலையங்கள் ஐந்தில் ஒன்றான யூஸ்ரன் ரயில்  நிலையத்தில் இருந்து, புறநகர் பகுதிகளான – பேர்மிங்காம், (வெஸ்ற் மிட்லன்ட்), லிவபூல், மில்டன் கீன்ஸ், கொவன்றி உள்ளிட்ட அனைத்து மார்க்கங்களுக்கும் செல்லும் ரயில் சேவைகள் தடைப்பட்டதனால் இந்தப் பகுதிகள் சன நெரிசல்களால் நிரம்பிய மாலை வேளையாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நெருக்கடி நிலையை சீர்செய்வதற்கான பணியில் இறங்கியுள்ள ரயில் சேவைகள் துறையினர் இன்று இரவுக்குள் திருத்தப் பணிகளை நிறைவு செய்து நாளை காலை ரயில் சேவைகளை வழமைக்கு கொண்டுவர முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதே வேளை இன்றைய மாலைப் பொழுதில் தேசிய ரயில் சேவைகள் தடைப்பட்டமைக்கு வருத்தம் வெளியிட்டுள்ள ரயில் சேவைகள் நிர்வாகம் இன்றைய ரயில் பற்றுச்சீட்டுகளை மீள பயன்படுத்த அல்லது அதற்கான பணத்தை மீளப்பெற ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்