மே 18இல் முள்ளிவாய்க்காலில் அனைவரும் ஒன்றுதிரண்டு உறவுகளை நினைவுகூருவோம்!

மே 18இல் முள்ளிவாய்க்காலில் அனைவரும் ஒன்றுதிரண்டு உறவுகளை நினைவுகூருவோம்! – வடக்கு முதல்வர் விக்கி அழைப்பு
“தமிழ் மக்களின் சரித்திரத்தில் மாறா இடம்பெற்றுவிட்ட சோக வரலாற்றுப் பதிவே முள்ளிவாய்க்கால். அன்றைய தினம் என்றென்றும் எமது மக்களின் வரலாற்றில் துக்க தினமாக கடைப்பிடிக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் ஒன்று சேர்ந்து – ஒருமித்து கடைப்பிடிக்க வேண்டும். முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவேந்தலில் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து பங்குபற்ற வேண்டும்.”
– இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
“அநியாயமாகக் கொலை செய்யப்பட்ட எமது மக்களை நாம் ஒன்றிணைந்து நினைவுகொள்வதன் மூலம் மக்களின் பெரிய துயர அலையை உண்டுபடுத்துகின்றோம். இறந்துபோனவர்களின் ஆன்மாக்கள் சாந்தி அடைய வேண்டும் என்று ஒருமித்து மனதாரக் கோரிக்கை விடுவது இங்கும் பிறநாடுகளில் வாழும் தமிழ் மக்களையும் மனதால் ஒன்று சேர்க்க உதவுகின்றது. எமது மக்களின் ஒற்றுமையே எமது கோரிக்கைகளுக்கு ஆட்சியாளர்களைச் செவிசாய்க்க வைக்கும். மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கட்சி, மத, இன, வர்க்க பேதமின்றி, ஏழைகள் பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி எமது மக்கள் சேர்ந்து பங்குபற்ற வேண்டும்” என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 18ஆம் திகதி வியாழக்கிழமை  முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு நடத்த ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தமிழ் மக்கள் பேரவை தலைமையேற்று நடத்த வேண்டும் எனவும், அவ்வாறு நடத்தப்படாவிட்டால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நினைவேந்தலை தனித்து ஏற்பாடு செய்யும் எனவும் அறிவித்திருந்த நிலையிலேயே, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இந்த ஊடக அறிக்கை வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் அவர் அனுப்பிய ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
விசாரணைப் பொறிமுறை இன்னமும் இல்லை 
வடக்கு – கிழக்கு மாகாண தமிழ் மக்களின் சரித்திரத்தில் மாறா இடம்பெற்றுவிட்ட சோக வரலாற்றுப் பதிவே முள்ளிவாய்க்கால். அன்றைய தினம் என்றென்றும் எமது மக்களின் வரலாற்றில் துக்க தினமாக கடைப்பிடிக்க வேண்டும். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவிலே உயிரிழந்த ஆயிரமாயிரம் பொதுமக்கள் தொடர்பான உண்மை நிலை இது வரைக்கும் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படவில்லை. நடந்தது சம்பந்தமான நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைப் பொறிமுறை இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை, போரிலே கொல்லப்பட்டவர்களுக்கான நீதி உறுதிப்படுத்தப்படும் என்ற தோரணையில் மேலும் இரு வருடங்கள் கால நீட்சி அளித்துள்ளது. வெளிப்படைத் தன்மையுடன் பொறுப்புக்கூறலானது நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பு. இலங்கை அரசு இது பற்றிய உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறியே கால நீட்சி பெற்றுக் கொண்டார்கள். அது பற்றி எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்க அரசு முன்வருவதாகத் தெரியவில்லை. சந்திரிகா அம்மையார் மட்டும் வெளிநாட்டு உள்ளடங்கலுடன் போர்க்குற்ற விசாரணை  நடைபெற வேண்டும் என்ற தமது தனியான கருத்தை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு உள்ளீடுகள் இல்லாத நீதி விசாரணை ஒரு போதும் உண்மையை வெளிக்கொண்டுவர உதவி செய்யாது.
அநீதிகளை  எடுத்துரைக்க உதவும்
இதனை நாங்கள் வேண்டி நிற்பதன் நோக்கம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே என்று நம்புகின்றார்கள். அதனால் பெருந்தன்மையுடன் இரக்கம் காட்டி அதைப்பற்றி மறந்துவிடலாமே என்று கூறுகின்றார்கள். இவ்வாறு கூறுபவர்கள் கொழும்பிலும் வேறு இடங்களிலும் சொகுசாக இருந்து கொண்டு இவ்வாறான கருத்துக்களை வெளிக்கொண்டு வருகின்றார்கள். இது தவறு. இப்பேற்பட்ட விசாரணை தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துரைக்க உதவும்;.
குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றார்களோ இல்லையோ இதுவரை காலமும் தமிழ் மக்கள் எவ்வாறு நடாத்தப்பட்டுள்ளார்கள் என்பது சம்பந்தமான விடயங்கள் இவ்வாறான விசாரணைகள் வெளிக்கொண்டு வருவன. அத்துடன் நடந்தவை வெளிச்சத்திற்கு வந்தால் அவை தமிழ் மக்களின் நல்லதொரு அரசியல் தீர்வுக்கு முன்னோடியாக அமையக்கூடும். தமிழர்கள் தமது அரசியல் உரிமைக்கான கோரிக்கைகளை இதுவரை காலமும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்த காரணங்களை எடுத்தியம்ப அவ்வாறான விசாரணைகள்  வழிவகுப்பன. உண்;மையான அதிகாரப் பரவலாக்கம் விரைந்து செயற்பட வேண்டியதொன்று என்பதை அனைவரையும் அறிந்து கொள்ளச்செய்வன.
ஒருங்கிணைய வேண்டும்
இன்று ஜனநாயக வழிமுறைகளில் மக்கள் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளார்கள். அடிதடி எடுத்தே ஒரு விடயத்திற்கு தீர்வு காணலாம் என்ற எண்ணம் போய் எம்மை நாமே வருத்தி அஹிம்சை முறையில் போராடி வெற்றிகள் காணமுடியுமென்பதை எமது மக்கள் எடுத்துக்காட்டி வருகின்றார்கள்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் அந்தவகையிலே ஒருவிதப் போராட்டந் தான். அநியாயமாக கொலை செய்யப்பட்ட எம் மக்களை நாம் ஒன்றிணைந்து நினைவு கொள்வதன் மூலம் மக்களின் ஒரு பெரிய துயர அலையை உண்டுபடுத்துகின்றோம். இறந்து போனவர்களின் ஆன்மாக்கள் சாந்தி அடைய வேண்டும் என்று ஒருமித்து மனதார கோரிக்கை விடுவது இங்கும் பிறநாடுகளில் வாழும் தமிழ்மக்களையும் மனதால் ஒன்று சேர்க்க உதவுகின்றது.
எம் மக்களின் ஒற்றுமையே எமது கோரிக்கைகளுக்கு ஆட்சியாளர்களைச் செவிசாய்க்க வைக்கும். 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கட்சி, மத, இன, வர்க்க பேதமின்றி, ஏழைகள் பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி எமது மக்கள் சேர்ந்து பங்குபற்ற வேண்டும். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் அத்துடன் நாட்டின் ஏனைய இடங்களில் வசிக்கும் தமிழ் மக்களும் புலம்பெயர் தமிழ்மக்களும் ஒன்று சேர்ந்து தமது துக்கத்தை வெளிப்படுத்தும் நாளாக அதை மாற்ற வேண்டும் – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்