கனடா தினக் கொண்டாட்டத்தில் தமிழ்ப்பயணப் படகுக் கதை.

அதிசய உலகம்

famers Struggle

மேலும்..

 

ஜூலை 1ந் திகதி தலைநகரில் நடக்கவிருக்கும் கனடா தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 1986ம் ஆண்டு நியூபவுண்லாந்துக் கடலில் கனடிய மீனவர்களால் 155 தமிழர்கள் காப்பாற்றப்பட்ட கதை கண்காட்சியாகிறது. முதன் முறையாக கனடிய மக்களும் அரசும் இணைந்து கடல் வழியாக வந்த தமிழ் அகதிகளைக் காப்பாற்றிய அற்புதமான கனடியக் கதை இது. நெஞ்சையுருக்கும் இக்கதையின் நேரடி சாட்சியமாக மிதந்த இரண்டு படகுகளில் ஒன்று, நம்மை வாழவைக்கும் கனடாவிற்கு நன்றி சொல்லும் வகையில் அனைத்துக் கனடியர்களும் காண்பதற்காக, கனடா தினக் கொண்டாட்டங்களின்போது காட்சிக்கு வைக்கப்படுகிறது. கனடாவின் மத்திய அரசு, ஒன்ராறியோ மாநில அரசு ஆகியவற்றின் நேரடி ஆதரவுடன் கனடியத் தமிழர் பேரவை இதற்கான ஏற்பாடுகளை முழுமூச்சுடன் செய்து வருகிறது. ஒட்டாவாவை தவிர்த்து, மென்றியல், கிங்ஸ்ரன் ஆகிய நகரங்களிலும் இப் படகு கனடா தினக் கொண்டாட்டங்களின் பகுதியாக இருக்கும்.

படகு, ஜூன் 24 சனிக்கிழமை, ஜூலை 25 ஞாயிற்றுக்கிழமை இரு தினங்களும் கியூபெக் மாகாணத்தில் மொன்றியல் – திருமுருகன் ஆலயத்திலும், ஜூன் 27 செவ்வாய், ஜூன் 28 புதன் ஆகிய தினங்களில் கிங்ஸ்ரன் நகரசபைக் கட்டிடத்திற்கு அருகாமையிலும் கனடா தினமான சனிக்கிழமை, ஜூலை 1ந்திகதியும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 2ந் திகதியும் ஒட்டாவா பாராளுமன்றத்திற்கு மிக அருகிலுள்ள Dominion-Chalmers United Church தேவாலயத்திலும் காட்சியிலிருக்கும். கண்காட்சியோடு தமிழர்களின் இசை, நடனம், உணவு என்பனவும் சக கனேடியர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படவிருக்கிறது.

“நியூபவுண்லாந்தில் தமிழ் அகதிகள் காப்பாற்றப்பட்டமை கனடிய மதிப்பீடுகளின் அம்சங்களாகச் சொல்லப்படும் இரக்கம், பச்சாதபம், அரவணைப்பு என்பவற்றை சிறப்புக்கூறுகளாக கொண்டுள்ள அற்புமானதொரு கனடியக் கதையாகும். இதுபோன்ற கதைகள் உலகெங்கும் இருந்து மக்கள் ஒட்டாவா வந்து கனடாவின் 150வது பிறந்த தினத்தைக் கொண்டாடக் குழுமும்போது, தேசத் தலைநகரில் சொல்லப்படுவது அவசியமாகும்.” என இது குறித்து கனடியத் தமிழர் பேரவையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒட்டாவாவில் நடக்கும் கொண்டாட்டங்களில் தமிழ் மக்கள் கலந்து கொள்ள 3 தினங்கள் தங்குமிட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களுக்கு கனடியத் தமிழர் பேரவையுடன் (416 240 0078 / tamiljourneys86.org) உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்