அமெரிக்காவை எதிர்த்து போரிட 40 லட்சம் வீரர்கள் தயார் : வட கொரியா அதிரடி அறிவிப்பு!

அமெரிக்க நாடானது வட கொரியாவின் மீது போர் தொடுத்தால் அவர்களை எதிர்த்து போரிட 40 லட்சம் வீரர்கள் தயாராக உள்ளனர் என்று வட கொரியா அதிரடியாக அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய 2 நாடுகளிடையே நிலவும் அசாதாரண சூழல் ஒவ்வொரு நாளும் வலுவடைந்து கொண்டே வருகிறது.

அமெரிக்காவிலுள்ள குவாம் தீவை ஏவுகணை மூலம் தாக்குவோம் என்று வட கொரியா அறிவித்தது.

அதனை தொடர்ந்து, அமெரிக்காவின் மோசமான தாக்குதல்களை எந்த நேரத்திலும் வட கொரியா சந்திக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், வட கொரியா அரசு நடத்தும் பத்திரிக்கை இன்று ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது.

அந்த தகவலில், வட கொரியா மீது அமெரிக்கா போர் தொடுத்தால் அதனை எதிர்க்கொண்டு பழிக்குப் பழி வாங்குவதற்கு தங்களிடம் 3.47 மில்லியன் வீரர்கள் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை எதிர்த்து போரிடுவதற்காக ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், மாணவர்கள், முதியவர்கள் என்று சுமார் 40 லட்சம் பேர் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளதாக அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், வட கொரியா மீது அமெரிக்கா முன்மொழிந்த புதிய பொருளாதார தடைக்கு ஐ.நா சபை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று வட கொரியா தலைநகரான பியோங்யாங்கில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு அமெரிக்காவை எதிர்த்து போரிடுவோம் என முழக்கங்கள் இட்டதாக வட கொரியா அரசு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்