இனவாதத்தை உசுப்பிவிடுவது சமூக ஒற்றுமையை பாழாக்கும்! – அமைச்சர் ரிஷாத் தெரிவிப்பு

அதிசய உலகம்

Original bhakupali

மேலும்..
“தேர்தல் வெற்றிக்காக  இனவாதத்தையும் மதவாதத்தையும் உசுப்பி தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற நினைப்பவர்கள் சமூக ஒற்றுமையைப் பாழ்படுத்துகின்றார்கள்” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
ஈரானிய இஸ்லாமிய குடியரசுக்கான இலங்கையின் தூதுவராக பதவியேற்கவிருக்கும் கலாநிதி மொஹமட் ஷரீப் அனீஸை பாராட்டும் நிகழ்வு வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்றபோது பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாத் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“அரசியல் பயணம் மிகவும் கடினமானது. அதுவும் வன்னி மாவட்டத்தில் இந்தப் பயணத்தில் தாக்குப்பிடிப்பதென்பது மிக மிகக் கடினமானது. அகதியான ஒருவர் அரசியலுக்குள் வந்து எம்.பியாகி, அமைச்சராகி, பின்னர் கட்சியொன்றை தொடங்கி சமூகத்துக்கு தொடர்ந்தும் பணியாற்றுவதென்பது நினைத்தும் பார்க்கமுடியாத ஒன்றாக இருந்தபோதும், இறைவனின் உதவியாலும் மக்களின் ஆதரவாலும் இதனைச் சாதிக்கமுடிந்தது.
இரண்டு முறை நாடாளுமன்றம் செல்வதே கடினமானதென அப்போது சிலர் கூறினர். ஆனால், இறைவனின் நாட்டம் இருந்ததனால் நான்கு முறை செல்ல முடிந்திருக்கின்றது. நான் சார்ந்த சமூகத்துக்கு மாத்திரமன்றி தமிழ், சிங்கள சமூகத்துக்கும் எனது பணிகளை வியாபிக்கும் வகையில் செயற்பட்டுவருகிறேன்.
யுத்த காலத்தில் வன்னியில் மேற்கொண்ட அரசியல் செயற்பாடுகளை எண்ணிப்பார்க்கும்போது ஒருவகையான பீதி வருகின்றது. கலிமாவை மொழிந்துகொண்டு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தில் இந்தப் பிரதேசத்தில் மன்னாருக்கும் வவுனியாவுக்குமிடையே எத்தனையோ நாட்கள் பயணம் செய்திருக்கின்றோம்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சகோதரர்கள் எண்ணற்ற துன்பத்தில் துவழ்கின்றார்கள் என்று தெரிய வந்தபோது புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் கனகரட்ணம் எம்.பியுடன் சென்ற காலங்களை நினைத்துப் பார்க்கின்றோம்.
அரசியல்வாதிகள் சவால்களுக்கு முகங்காடுக்கவேண்டியது சகஜம்தான். ஆனால், நாங்கள் முகங்கொடுத்த பிரச்சினைகள் நினைத்தும் பார்க்கமுடியாதவை. இறைவனின் உதவியுடன் நாம் மேற்கொண்ட இந்த அரசியல் பயணத்தில் 12 வருடங்களுக்கு முன்னரே சகோதரர் அனீஸும் எம்முடன் இணைந்து கொண்டவர்.
அரசியலுக்குள் நான் கால்பதித்தபோது எனக்கு அப்போது வயது 26. என்னைப் பார்த்து சிலர் சிரித்தார்கள்.  “இவரா? இந்தச் சின்னப் பையன் நாடாளுமன்றம் போவதா? இவருக்கு முடியுமா?” என்று என்னைப்பற்றி ஏளனத்துடன் கதைத்தபோது சில பெரியவர்கள் எனக்குத் தைரியமூட்டி, “முன்னே செல். இறைவனின் உதவியால் உனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும். நீ சமுதாயத்துக்குப் பணியாற்றுவாய்” என்றார்கள்.
உளத்தூய்மை, இறைவன் மீதான நம்பிக்கை, சமுதாயத்தின் மீது கொண்ட அதீத பற்று இருந்ததனால் கரடுமுரடான இந்த அரசியல் பயணத்தை வெற்றிப்பயணமாக இறைவன் மாற்றித் தந்தான்.
கலாநிதி அனீஸின் நட்பு கிடைத்தபோது அவரிடம் பல அரிய நல்ல பண்புகளைக் காணமுடிந்தது. படித்தவன் என்ற மமதை இல்லாது நல்ல பண்பாளராக, எல்லோரையும் சமனாக மதிக்கும் அன்புள்ளம் கொண்டவராக அவர் விளங்கினார். எனது அரசியல் வாழ்வில் இக்கட்டான நிலைகள் ஏற்பட்டபோதெல்லாம் அவர் கைகொடுத்திருக்கின்றார். அத்துடன் சிறந்த ஆளுமையை அவரிடம் கண்டோம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்