வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா!- நடைமுறைப்படுத்திவரும் அர்த்தமுள்ள செயற்திட்டங்கள்

தீவகத்தின் கலைக் கோயிலாகத் திகழும் வேலணை மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கமானது தனது நீண்டகாலச் சிறப்பான செயற்பாடுகளின் மூலம் கனடாவில் இயங்கும் மூத்த மற்றும் முதன்மையான இலாப நோக்கற்ற அமைப்புக்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.

குறிப்பாகக் கடந்த ஐந்தாண்டுகளாக இச்சங்கம் நடைமுறைப்படுத்திவரும் அர்த்தமுள்ள செயற்திட்டங்கள் மிகவும் பயனுள்ளதும் அனைவராலும் பாராட்டப்பட வேண்டியதும் மற்றவர்களால் பின்பற்றப்படக்கூடியதும் என்றால் அது மிகையல்ல.

1) யூன்- 2011 முதல் நடைமுறையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கான நிதி உதவித் திட்டம்:

வேலணை மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழக அனுமதி பெற்றுப் பொருளாதார வசதியின்மையால் தமது பட்டப்படிப்பைத் தொடரமுடியாமல் அல்லலுறும் 24 மாணவர்களுக்கு (யாழ் பல்கலைகழகம் – 15 மாணவர்கள், கிழக்குப் பல்கலைகழகம் – 6 மாணவர்கள், கொழும்புப் பல்கலைக்கழகம் – 1 மாணவர் பேராதனைப் பல்கலைக்கழகம் – 1 மாணவர்; சபரகமுவப் பல்கலைக்கழகம் – 1 மாணவர்) மாதம் ஒன்றுக்கு மாணவர் ஒருவருக்கு தலா 3000.00 ரூபா வீதம் மாதாமாதம் 72, 000.00 ரூபா நிதியுதவியை தற்பொழுது வழங்கி வருவதோடு இத்திட்டம் தொடங்கிய யூன்- 2011 இலிருந்து ஜனவரி- 2016 வரை மொத்தம் 49, 370.00 டொலர்கள்

2) ஒக்ரோபர் – 2012 முதல் நடைமுறையிலுள்ள கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான நிதி உதவித் திட்டம்:

இத்திட்டத்தின் மூலம் மிகவும் பின்தங்கிய நிலையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 7 க.பொ.த உயர்தர வகுப்பு விஞ்ஞானப்பிரிவு மாணவர்கள் யாழ்ப்பாணம் சென்று ரியூசன் கற்றலுக்கான வசதியைப் பெற்றுள்ளார்கள். மாணவர் ஒருவருக்கு மாதம் 2000.00 ரூபா வீதம் மாதாமாதம் 14,000.00 ரூபா நிதியுதவியை தற்போது வழங்கி வருகின்றோம். இத்திட்டம் தொடங்கிய ஒக்ரோபர் – 2012 இலிருந்து ஜனவரி- 2016 வரை மொத்தம் 4, 265.00 டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

3) ஏப்ரல்-2013 முதல் நடைமுறையிலுள்ள 6, 7, 8, 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பரிகார கற்பித்தல் செயற்திட்டம்:

பொதுவாக தீவுப்பகுதியில் குடித்தொகை ஐதாக்கத்தின் காரணமாக மாணவர் எண்ணிக்கை குறைவாகும். எனவே எமது கல்லூரியில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடன் அனுமதிக்காக விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகின்றது. இவ்வாறு அனுமதி பெறும் மாணவர்களில் 45 வீதமான மாணவர்கள் அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவில் மிகவும் பின்தங்கியவர்களாக இருப்பது அதிர்ச்சி தரும் உண்மையாகும்.

இச்சதவீதமான மாணவர்களது எழுத்தறிவு மற்றும் கணித அறிவினை மேம்படுத்துவது வழமையான கற்றல் கற்பித்தல் செயற்பாட்டின் மூலம் அசாத்தியமானதாகும். ஒவ்வொரு வகுப்பிலும் தொடர்ச்சியாகக் காணப்படும் இம்மாணவர்களுக்கான விசேட பரிகார கற்பித்தல் செயற்றிட்டம் ஏப்ரல் 27, 2013 முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இத்திட்டத்திற்கு மாதம் ஒன்றிற்கு சராசரியாக 25, 000.00 ரூபாக்கள் வீதம் மாதாமாதம் வழங்கிவருகின்றோம்.

இத்திட்டம் தொடங்கிய ஏப்ரல்-2013 இலிருந்து ஜனவரி- 2016 வரை மொத்தம் 7, 405.00 டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட மூன்று திட்டங்களுக்குமாக மொத்தம் 61, 040.00 டொலர்கள் இதுவரை செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலத்தின் கட்டாயமான இச்சீரிய பணியினைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்குச் சங்கத்தின் அங்கத்தவர்கள், கல்லூரியின் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் மற்றும் புலம்பெயர் மண்ணின் வர்த்தகப் பெருமக்கள் அனைவரும் தமது முழுமையான ஆதரவையும் தம்மால் இயன்ற பங்களிப்பையும் நல்குமாறு சங்கத்தின் சார்பில் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகட்கு: செழியன் (தலைவர்): 416-949-7795 சிவா (செயலாளர்): 416-562-4141 சிறீதரன் (பொருளாளர்): 416-661-3494

பின்குறிப்பு: சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத்தெரிவும் வழமைபோல் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.

vc