தமிழ் முறையில் திருமணம் செய்வோம்: தமிழராகவே வாழ்வோம் (Photos)

அவையோரே, நீங்கள் பேராசிரியர் பி.டி. சீனிவாச அய்யங்காரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் தமிழர் வரலாற்றை ஆய்வு செய்து ‘தமிழர் வரலாறு’ என்னும் நூலை எழுதிய பேரறிஞர். இவர் தனது நூலிலே “பண்டத் தமிழர் திருமண முறையிலே ஆரியக் கலப்பேதும் அறவே இல்லை. தீ ஓம்பல் இல்லை, தீயை வலம் வரலும் இல்லை. தட்சிணை வாங்கப் புரோகிதரும் இல்லை” என்று கூறுகின்றார்.

நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான், ஐயர் அல்லது புரோகிதரைக் கொண்டு நடத்தும் திருமணத்திலே உங்களுக்கு என்ன முரண்பாடு என்று நீங்கள் கேட்கலாம்? இங்கேதான் சிக்கல் இருக்கின்றது. புரோகிதர் அல்லது ஐயர் சொல்லும் மந்திரங்களிலிருந்து அனைத்தும் மணமக்களை இழிவு படுத்துவதாகவே அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, ஐயர் நடத்துகின்ற திருமணத்திலே ‘கன்னிகாதானம்’என்று ஒரு பகுதி உண்டு. அவ்விடத்திலே ஐயர் ஒரு சுலோகத்தைக் கூறுவார். அதை மணமகன் திரும்பக் கூறுவார். அதை என்னவென்று கேளுங்கள்:

‘ஸோமப் பிரதமோ திவிதே
கந்தர்வோ விவித உத்தர ஹா
(தி)த்ருதியோ அக்நிஷ்டே பதி ஹா
துரியஸ்தே மனுஷ்யஸா ஹா’

இதன் பொருள் அல்லது கருத்து யாதெனில்: இந்தப் பெண்ணை முதலில் சோமன் மனைவியாக வைத்திருந்தான். பின்பு கந்தர்வன் இவளைச் சேர்ந்து இருந்தான். மூன்றாவதாக அக்கினி இவளுக்கு மணவாளனாக இருந்தான். நான்காவதாக மனித குலத்தில் பிறந்த நான் இவளை மனைவியாக்கிக் கொள்கிறேன்.

‘சோமன், கந்தர்வன், அக்கினி ஆகிய மூவரும் மனைவியாக வைத்திருந்த உன்னை நான்காவதாக நான் மணக்கிறேன்” என்று மணமகன் கூறுவது, மணமகளையும் மணமகனையும் இழிவுபடுத்துவதும், செயல் என்பதை நான் கூறாமலே நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இது மட்டுமல்ல, ஐயர் அல்லது புரோகிதரைக் கொண்டு நடத்தும் திருமணத்திலே இந்த அவையிலே சொல்ல முடியாத பல சுலோகங்கள் உள்ளன. அவற்றைச் சொல்லித்தான் திருமணம் நடைபெறுகின்றது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.’

இவ்வாறு திருநிறைச் செல்வன் பிரசாத், திருநிறைச் செல்வி ஆர்த்தி ஆகியோரது தமிழ்முறைத் திருமண விழாவுக்கு தலைமை தாங்கி நடத்தி வைத்த கனடா தமிழ்க் கல்லூரி முதல்வர் ஆசிரியர் சண்முகம் குகதாசன் தனது தலைமை உரையில் குறிப்பிட்டார். (முழுப் பேச்சையும் வேறு பக்கத்தில் பார்க்கவும்.)

மங்கல விளக்கினை மணமக்களின் பெற்றோர் திரு, திருவாட்டி தனபாலசிங்கம் திரு, திருவாட்டி சிவபாதசுந்தரம் ஆகியோர் ஏற்றி வைத்தனர். தமிழ்மறை, தமிழ்த்தாய் வாழ்த்தை இசைமணி திருமதி ஜெயகாந்தினி திருஞானசம்பந்தன் இனிமையோடு பாடினார்.

மணவிழாவுக்கு வருகை தந்த பெரியோர்கள் தாய்மார்கள், நண்பர்களை திரு சிவா வேலுப்பிள்ளை வரவேற்றுப் பேசினார்.

திருவாளர்கள் நக்கீரன் தங்கவேலு (தலைவர் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்), பேராசிரியர் முனைவர் கு.தண்டபாணி, பெட்னா முன்னாள் தலைவர் நாஞ்சில் பீட்டர், மருத்துவர் சாந்தகுமார் மற்றும் ஆசிரியர் ஐ.சண்முகநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

ஆசிரியர் ஐ. சண்முகநாதன் தனது வாழ்த்துரையில் மணமக்கள் பிறக்கப் போகும் தங்கள் குழந்தைகளுக்கு தனித் தமிழ் பெயரைச் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

“முதற்கண் தங்களது பிள்ளைகளது திருமணத்தை தமிழ்முறைத் திருமணமாக நடாத்தும் மணமகளின் பெற்றோர் திரு சிவா வேலுப்பிள்ளை திருவாட்டி சிவமணி குடும்பத்தாருக்கும் மணமகனின் தாய்தந்தையர்கள் திரு தனபாலசிங்கம் திருவாட்டி கண்மணி குடும்பத்தாருக்கும் எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மணமகள் – மணமகன் இருவரது பெற்றோர்களின் முன்மாதிரியை பின்பற்றி உங்களது பிள்ளைகளுக்கும் தமிழ்முறைத் திருமணங்களை செய்ய முன்வரவேண்டும். அதன் மூலம் எமது தாய்மொழியான தமிழ்மொழிக்கு சிறப்புச் செய்யுங்கள்” என நக்கீரன் தங்கவேலு (தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) தனது வாழ்த்துரையில் கேட்டுக் கொண்டார். (முழுப் பேச்சை வேறொரு பக்கத்தில் பார்க்கவும்)

இசைமணி திருமதி ஜெயகாந்தினி திருஞானசம்பந்தன் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பாடலை இசையோடு பாடி அவையோரை மகிழ்வித்தார். இன்னிசை வேந்தன் பி.நாகேந்திரன் குழுவினர் இன்னிசை வழங்கினர்.

திருமண விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் திரு தனபாலசிங்கம் சின்னத்தம்பி நன்றியுரை கூறினார்.

திருமணப் பதிவை பதிவாளர் திரு நா.சுப்பிரமணியம் செய்து வைத்தார். மணமக்கள் ஏற்கனவே உறுதிமொழி எடுத்துக் கொண்டதால் மீண்டும் உறுதிமொழி எடுக்கத் தேவையில்லை எனப் பதிவாளர் சொன்னார்.

மணமக்களால் தமிழ் -ஆங்கிலம் இருமொழியிலும் பதிக்கப்பட்ட உரையுடன் கூடிய திருக்குறள் புத்தகத்தை வருகை தந்த அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கினார்கள். இன்று எமது தாய்மொழி தமிழ் ஏற்றம் பெற்ற நாள். தமிழர் தலை நிமிர்ந்த நாள்!

மதிப்புக்குரிய மணமக்களே, பெருமதிப்புக்குரிய பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே. இளையோரே உங்கள் அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கம்.

அவையோரே, இன்று பொதுவாகத் தமிழர் வீட்டுத் திருமணம் என்றதும் ஐயர், ஒமகுண்டம், அம்மி மிதித்தல், அருந்ததி காட்டல், கன்னிகாதானம், தட்சணை முதலியனவே தமிழ்மக்களின் நினைவுக்கு வரும். இவை இல்லாமல் ஒரு திருமணமா? என்று கேட்போரையும், இவை இல்லாமல் திருமணம் செய்தால், வாழ்க்கையில் இடையூறுகள் ஏற்பட்டுவிடுமோ? என்று அச்சம் உறுவோரையும், ஐயர் செய்யும் இந்தத் திருமணமுறையே தமிழருடைய முறை என்று அமைதி காண்போரையும் தமிழ் மக்களிடையே நாம் மிகுதியாகக் காணலாம்.

ஐயர் செய்து வைக்கும் இந்தத் திருமண முறையும், கலியாணம், விவாகம், பரணிக்கிரகணம், வதூவரம், கன்னிகாதானம் முதலிய சமற்கிருதச் சொற்களும் ஓரிரு நூற்றாண்டுக்குள்ளேயே தமிழருக்குப் பெரிதும் அறிமுகமாகியுள்ளன என்பதையும், தமிழர் வரலாறு மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை வாய்ந்தது என்பதையும் நாம் முதலில் நினைவிற் கொள்ள வேண்டும். ஐயர் செய்து வைக்கும் இந்தத் திருமண முறை தமிழருடையது அல்ல என்றால் தமிழருடைய திருமண முறை எது என்ற வினா எழுகின்றது. இதற்கு விடை காண்பதற்கு நாங்கள் சங்க நூல்களைப் புரட்டிப் பார்க்க வேண்டும்.

அவையோரே, பண்டைத் தமிழ் மக்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாம் வாழ்ந்நிலப்பகுதியை புவியில் அடிப்படையில், முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை எனப் பிரித்து இருத்தல், புணர்தல், ஊடல், இரங்கல், பிரிதல் என்னும் அக ஒழுக்கங்களையும் வஞ்சி, வெட்சி, உழிஞை, தும்பை, வாகை என்னும் புற ஒழுக்கங்களையும் வகுத்து வைத்திருந்தனர்.

இந்த நிலங்களிலே கன்னியரும், காளையரும் ஒருவரை ஒருவர் காணவும் காதல் கொள்ளவும் ஏற்ற சூழல்கள் காணப்பட்டன. அவ்வாறு காதல் மலருமிடத்து அது செவிலித்தாய் வழியாகப் பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டு ஊர் அறியத் திருமணம் செய்து வைக்கும் முறையைச் சங்க நூல்கள் எமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

இத்தகைய தமிழ்த் திருமணம் ஒன்றைச் சங்கத்தமிழ் நூலான அகநானூற்றின் 86 மற்றும் 136 ஆவது பாடல்கள் எம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன.

வளர்பிறை நாளில், விடியற் பொழுதில் இத்திருமண நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. வரிசையாகக் கால்கள் நடப்பட்டுப் பந்தல் அமைக்கப் பட்டிருக்கின்றது. இப்பந்தலிலே வெண்மணல் பரப்பப்பட்டிருக்கின்றது. விளக்குகள் ஏற்றப்பட்டிருக்கின்றன, மலர் மாலைகள் தொங்கவிடப்;பட்டிருக்கின்றன. உற்றார், உறவினர் கூடியிருக்கின்றனர். உழுத்தம்மா போட்டுச் சமைத்த களியையும் நெய்மணக்கும் சோற்றையும் கூடியிருப்போர் உண்டு மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த வேளையிலே மக்கள் தொண்டிலே ஆர்வம் மிக்கவரும் பிள்ளைகளைப் பெற்றெடுத்தவருமான பேரிளம் பெண்கள் அகன்ற வாயையுடைய மண்பானையில் பூக்கள் மற்றும் நெல் கலந்த நீரைச் சுமந்து வந்து மணமகளை நீராட்டுகின்றனர். அதன் பின்பு மணப்புடவையால் மணமகளை அழகுபடுத்தி மணப்பந்தலிலே கொண்டு வந்து இருத்துகின்றனர். அவ்வீட்டிலே வணங்கும் தெய்வத்துக்கு வழிபாடு இயற்றுகின்றனர். மணமுழா முழங்குகின்றது. காப்பு நூல் கையில் அணிவிக்கப்படு கின்றது.

இவை அனைத்தையும்; பெண்களே நடத்தி முடித்து ‘கற்பொழுக்கத்தில் நின்றும் தவறாது, நல்ல பல கடமைகளைச் செய்து, உன்னை மனைவியாகப் பெற்றவன் பெரிதும் விரும்பும் பெருமைக்குரிய இல்லக்கிழத்தியாக விளங்கு வாயாக” என்று வாழ்;த்துக் கூறுவதையும் காணலாம். இவ்வாறாகப் பண்டைத் தமிழர் திருமணமானது ஓரிரு சடங்குகளோடு மகளிரே நடத்தி வந்தமையைச் சங்கப் பனுவல்கள் வாயிலாக நாம் அறிய முடிகின்றது.

அவையோரே, நீங்கள் பேராசிரியர் பி.டி. சீனிவாச அய்யங்காரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் தமிழர் வரலாற்றை ஆய்வு செய்து ‘தமிழர் வரலாறு’ என்னும் நூலை எழுதிய பேரறிஞர். இவர் தனது நூலிலே “பண்டத் தமிழர் திருமண முறையிலே ஆரியக் கலப்பேதும் அறவே இல்லை. தீ ஓம்பல் இல்லை, தீயை வலம் வரலும் இல்லை. தட்சிணை வாங்கப் புரோகிதரும் இல்லை” என்று கூறுகின்றார்.

நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான், ஐயர் அல்லது புரோகிதரைக் கொண்டு நடத்தும் திருமணத்திலே உங்களுக்கு என்ன முரண்பாடு என்று நீங்கள் கேட்கலாம்? இங்கேதான் சிக்கல் இருக்கின்றது. புரோகிதர் அல்லது ஐயர் சொல்லும் மந்திரங்களிலிருந்து அனைத்தும் மணமக்களை இழிவு படுத்துவதாகவே அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, ஐயர் நடத்துகின்ற திருமணத்திலே ஷகன்னிகாதானம்| என்று ஒரு பகுதி உண்டு. அவ்விடத்திலே ஐயர் ஒரு சுலோக த்தைக் கூறுவார். அதை மணமகன் திரும்பக் கூறுவார். அதை என்னவென்று கேளுங்கள்:

‘ஸோமப் பிரதமோ திவிதே
கந்தர்வோ விவித உத்தர ஹா
(தி)த்ருதியோ அக்நிஷ்டே பதி ஹா
துரியஸ்தே மனுஷ்யஸா ஹா’

இதன் பொருள் அல்லது கருத்து யாதெனில்: இந்தப் பெண்ணை முதலில் சோமன் மனைவியாக வைத்திருந்தான். பின்பு கந்தர்வன் இவளைச் சேர்ந்து இருந்தான். மூன்றாவதாக அக்கினி இவளுக்கு மணவாளனாக இருந்தான். நான்காவதாக மனித குலத்தில் பிறந்த நான் இவளை மனைவியாக்கிக் கொள்கிறேன்.

‘சோமன், கந்தர்வன், அக்கினி ஆகிய மூவரும் மனைவியாக வைத்திருந்த உன்னை நான்காவதாக நான் மணக்கிறேன்” என்று மணமகன் கூறுவது, மணமகளையும் மணமகனையும் இழிவுபடுத்துவதும், செயல் என்பதை நான் கூறாமலே நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இது மட்டுமல்ல, ஐயர் அல்லது புரோகிதரைக் கொண்டு நடத்தும் திருமணத்திலே இந்த அவையிலே சொல்ல முடியாத பல சுலோகங்கள் உள்ளன. அவற்றைச் சொல்லித்தான் திருமணம் நடைபெறுகின்றது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

எனவேதான், தமிழ்நாட்டிலே, தந்தை பெரியார், இவ்வாறு ஐயரைக் கொண்டு நடைபெறும் திருமணத்தை மரியாதை அற்ற திருமணம் என்றும் தமிழ் முறைப்படி செய்யும் திருமணத்தை தன்மரியாதை அல்லது சுயமரியாதைத் திருமணம் என்றும் எடுத்துரைத்தார். இந்த அடிப்படையிலேயே தமிழகத்தில் பெரும்பாலான திருமணங்கள் சுயமரியாதைத் திருமணங்களாக நடைபெறுகின்றன. இதையே இப்பொழுது இங்கே நாங்கள் செய்யப் போகின்றோம்.

அவையோரே, இந்த வேளையிலே தமிழர் திருமணத்தின் ஒருபகுதியாக தமிழ்மறை தந்த வள்ளுவப் பேராசான் மணமக்களுக்குரிய வகுத்துக் கூறியுள்ள கடமைகளைப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்குமென நம்புகிறேன். வள்ளுவப் பேராசான் இல்வாழ்க்கை| என்ற அதிகாரத்தின் வாயிலாக குடும்பத் தலைவனுக்குரிய கடமைகளையும் வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரத்தின் வாயிலாக குடும்பத் தலைவிக்குரிய கடமைகளையும் எடுத்துக் கூறியுள்ளார்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. (குறள் 41)

அஃதாவது குடும்பத்தலைவன் எனப்படுபவன் தனக்கு இயல்பாகவே உறவினராக உள்ள பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூன்று பகுதியினருக்கும் நல்வழிகாட்ட வேண்டியது அவனது கடமை என்று தொடங்கி இல்லறத்திலே வாழவேண்டிய முறையிலே வாழ்பவன் வானிலே உறைவதாக் கூறப்படும் தெய்வத்துக்கு ஒப்பாக – சமமாகப் போற்றப்படுவான் என்று கூறிமுடிப்பார். அதுபோலவே, இல்லத் தலைவியானவள்,

மனைத்தக்க மாண்புடையர் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்கான் வாழ்க்கைத் துணை. (குறள் 51)

என்பார். அஃதாவது இல்வாழ்க்கைக்கே உரியதாகக் கூறப்பட்ட விருந்தோம்பல் முதலிய நற்குண நற்செய்கைகள் உடையவளாக இருப்பதோடு குடும்ப வருவாய்க்குத் தக்க செலவை மேற்கொள்பவளாக விளங்க வெண்டுமென்று தொடங்கி இல்லத் தலைவியின் கடமைகளை வகுத்துரைப்பார். மணமக்கள் வள்ளுவப் பேராசான் வகுத்துரைத்துள்ள கடமைகளை படித்துப் பார்ப்பது பயன்தரும்.

இவ்வாறு, இல்லத் தலைவன் – தலைவியின் கடமைகளை வகுத்துரைத்த வள்ளுவப் பேராசான் காதல் சிறப்புப் பற்றியும் எடுத்துரைக்கத் தவறவில்லை. நேரம் கிடைத்தால் அதையும் படித்துப் பாருங்கள். ‘மலரினும் மெல்லியது காமம், சிலர் அதன்செல்வி தலைப்படுவார்’ என்று கூறுவார். அஃதாவது காதல் மலரை விட மென்மையானது. அதன் பக்குவம் அறிந்து அதன் பயனைப் பெறுபவர் ஒரு சிலரே ஆவார் என்பார்.

அந்த ஒரு சிலரிலே நீங்கள் முதன்மையானவராக விளங்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டு வள்ளுவரும் வாசுகியும் போல, தமிழும் இனிமையும் போல மணமக்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்தி விடை பெறுகின்றேன். நன்றி வணக்கம்.

உங்கள் பிள்ளைகளுக்கு தமிழ்முறைத் திருமணங்களை செய்து வையுங்கள்!- மணவிழாவில் நக்கீரன் தங்கவேலு வேண்டுகோள்

“முதற்கண் தங்களது பிள்ளைகளது திருமணத்தை தமிழ்முறைத் திருமணமாக நடாத்தும் மணமகளின் பெற்றோர் திரு சிவா வேலுப்பிள்ளை திருவாட்டி சிவமணி குடும்பத்தாருக்கும் மணமகனின் தாய்தந்தையர்கள் திரு தனபாலசிங்கம் திருவாட்டி கண்மணி குடும்பத்தாருக்கும் எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மணமகள் – மணமகன் இருவரது பெற்றோர்களின் முன்மாதிரியை பின்பற்றி உங்களது பிள்ளைகளுக்கும் தமிழ்முறைத் திருமணங்களை செய்ய முன்வரவேண்டும். அதன் மூலம் எமது தாய்மொழியான தமிழ்மொழிக்கு சிறப்புச் செய்யுங்கள்” என நக்கீரன் தங்கவேலு (தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.

நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு முன்னர் எனது இனிய நண்பர் சிவா வேலுப்பிள்ளை அவர்கள் என்னை எனது இல்லத்தில் சந்தித்து தனது மகள் ஆர்த்திக்கு தமிழ்முறைத் திருமணம் செய்யப் போவதாகவும் அதற்கான உதவிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கரும்பு தின்னக் கூலியா என்று சொல்லி அது தொடர்பான நூல்கள், திருக்குறள் புத்தகம் மற்றும் வேண்டிய தரவுகளைக் கொடுத்து உதவினேன்.

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் கடந்த காலங்களில் பல தமிழ்முறைத் திருமணங்களை நடாத்தி வைத்துள்ளது. நானே 54 ஆண்டுகளுக்கு முன்னர் எளிய முறையில் ஒரு தமிழ்முறைத் திருமணத்தை இரண்டு மாலை பத்துத் திருக்குறள்களோடு செய்திருக்கிறேன். மறைந்த அமரர் அமிர்தலிங்கம் அந்த மணவிழாவிற்கு தலைமை தாங்கி நடாத்தி வைத்தார்.

இன்று எந்தக் குறையும் இன்றி வாழ்கிறோம். ஆறு பிள்ளைகள் பன்னிரண்டு பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். எனவே இப்படியான திருமணங்களை தமிழ்முறைப்படி திருக்குறள் ஓதி செய்து கொண்டால் ஏதாவது தெய்வக் குற்றம் ஏற்படும் என்ற அச்சம் யாருக்கும் இருக்கத் தேவையில்லை. அதற்கு நானே சாட்சியாக இருக்கிறேன்.

நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு தமிழ்முறைத் திருமணங்களை செய்து வைக்க முன்வர வேண்டும். நாங்கள் தெட்சணை எதுவும் கேட்க மாட்டோம்.

நேரத்தின் அருமை கருதி எனது வாழ்த்துரையை சுருக்கமாக முடித்துக் கொள்ள விரும்புகிறேன். குலோத்துங்க சோழன் முடிசூட்டு விழாவில் அவனை வாழ்த்தி புலவர்கள் கவிதை படித்தார்கள். வாழ்த்துரை வழங்க அவ்வையார் அவையில் எழுந்து நின்றார். அவ்வையாரின் வாழ்த்தைக் கேட்க எல்லோரும் ஆவலோடு இருந்தார்கள். அப்போது அவ்வையார் ‘வரப்புயர’ என இரண்டு சொல்லில் வாழ்த்திவிட்டு அமர்ந்துவிட்டார்.

இதைனைக் கேட்ட அவையினருக்கு பொருள் என்னவென்று புரியவில்லை. பொருள் கூறுமாறு அவ்வையாரைக் கேட்டனர். அவ்வையார் எழுந்து நின்று அந்தத் இத்தொடரைப் பின்வருமாறு விளக்கியதாகக் கூறுவர்.

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோல் உயரும்
கோல் உயர கோன் உயர்வான்.

என்று பாடி மன்னனை வாழ்த்தி முடித்தார் ஒளவையார். மன்னரும் அவையோரும் பெரு மகிழ்ச்சியடைந்து அவ்வையாரைப் பாராட்டினார்கள்.

2003 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட யுனெஸ்கோ நிறுவன அறிக்கையின்படி இன்று உலகில் 6700 மொழிகள் பேசப்படுகின்றன. இம்மொழிகளிலே எட்டு மொழிகள்தான் ‘செம்மொழிகள்’ எனப் பொதுவாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை 1. கிரேக்கம், 2. இலத்தீன், 3. எபிரேயம் (Hebrew) 4. பாரசீகம் (Persian) 5. சமற்கிருதம் 6. சீனம் 7. அரபிக் 8. தமிழ்.

இதில் சமற்கிருதம் மற்றும் இலத்தீன் மொழிகள் வழக்கொழிந்த மொழிகள். ஒரு மொழி ”செம்மொழி” என் அழைக்கப்படுவதற்கு சில அடிப்படை அளவு கோல்களைக் கொண்டிருக்கவேண்டும். அம்மொழி

1. தொன்மை வாய்ந்த மொழியாக இருக்க வேண்டும்.

2. வேறு மரபிலிருந்து வந்த கிளையாக அல்லாமல் தற்சார்புரிமையுடைய மரபைக்கொண்ட மொழியாக இருக்க வேண்டும்.

3. ஏராளமான, உச்ச அளவு வளம் பொருந்திய பண்டைய இலக்கியங்களைக் கொண்ட மொழியாக இருக்க வேண்டும் என அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரும் பன்மொழி வல்லுனருமாகிய பேராசியர் ஜோர்ச் எல். ஹாட் குறிப்பிடுகின்றார்.

சில அறிஞர்கள் செம்மொழிக்கான இத்தகுதிப்பாடுகளைச் சற்று விரிவாக்கி பதினொரு தகுதிகளாகச் சுட்டிக்காட்டுகின்றனர் . அவையாவன 1. தொன்மை, 2. தனித்தன்மை, 3. பொதுமைப் பண்பு, 4. நடுவு நிலைமை, 5. தாய்த்தன்மை, 6. பாண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு, 7. பிறமொழித் தாக்கமில்லாத தன்மை, 8. இலக்கிய வளம், 9. உயர் சிந்தனை, 10. கலை இலக்கியத் தன்மை வெளிப்பாடு, 11. மொழிக் கோட்பாடு என்பனவே இந்த 11 தகுதிப்பாடுகள் ஆகும். தமிழ்மொழிக்கு இந்த 11 தகுதிப்பாடுகளும் உண்டு என்பது எமக்கு பெருமையாக இருக்கிறது.

இன்று இந்த திருமணவிழா முடிவில் உங்கள் ஒவ்வொருவருக்கும் பெருத்த பொருட் செலவில் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் எழுதப்பட்ட உரையுடன் பதிக்கப்பட்ட தெய்வப் புலவர் எழுதிய திருக்குறள் நூலை மணமக்கள் உங்களுக்கு வழங்க இருக்கிறார்கள். திருக்குறள் ஒரு அறநூல். 38 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதனை வாங்கிப் படிப்பதோடு நின்றுவிடாது உங்களது பிள்ளைகளுக்கும் வாழ்க்கைக்கு தேவையான சில குறட்பாக்களை ஆவது சொல்லிக் கொடுங்கள். அகவையில் குறைந்த பிள்ளைகளுக்கு அவ்வையார் எழுதிய ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நன்னெறி போன்ற நூல்களில் காணப்படும் பாடல்களை சொல்லிக் கொடுங்கள். அவை பிள்ளைகளின் ஒழுக்கத்துக்கு வேலியாக அமையும். திருவள்ளுவர் தலைவன் தலைவி இடையிலான உறவை,

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு

என்கிறார். உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை. அது போலவே மணமக்கள் உயிரும் உடலும் போல வாழ வேண்டும் என்பது இதன் பொருள்.

இறுதியாக இருமனம் ஒரு மனம் ஆக இணைவதே திருமணம் என்பார்கள். மணமக்கள் என்றென்றும் நீலவானும் நிலவும் போல, பூவும் மணமும் போல, பாட்டும் பொருளும் போல, கண்ணும் இமையும் போல தமிழும் சுவையும் போல இன்று போல் என்றும் நீடு வாழ வாழ்த்தி விடைபெறுகிறேன். வணக்கம்.

IMG_2879

IMG_2882

IMG_2894

IMG_2901

IMG_2916

IMG_2921

IMG_2932