கனடாவில் தமிழர் தெரு விழா 2016

கனடாவின் ஸ்காபரோவின் வீதிகளில் நடக்கும் கொண்டாட்டங்களில் மிகப் பெரிய விழாவாகக் கருதப்படும் ‘ வெள்ளிக்கிழமை, ஓகஸ்ட் 26ந் திகதி ஆரம்பமாகிறது. அங்குரார்ப்பண நிகழ்வு ஓகஸ்ட் 26 வெள்ளிக்கிழமை 5:00 மணிக்கு ஆரம்பமாகும்.

இந்நிகழ்வுகளில் 150,000க்கும் மேற்பட்ட மக்கள் பங்குபற்றுவார்கள் என்பதால் மக்களுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை விபரங்களை இங்கே தருகிறோம்.

பொது:
முதல் நாள் 2016, ஓகஸ்ட் 26 வெள்ளிக்கிழமை ஒன்ராறியோ முதல்வர் Kathleen Wynne அவர்கள் ஆரம்பித்து வைப்பார். தொடர்ந்து அங்குரார்ப்பண உரைகள் சுருக்கமாக இடம் பெறும். இலங்கையிலிருந்துமட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் ஆகியோரும் உரை நிகழ்த்துவர். அதன்பின் ‘தமிழர் தெருவிழா 2016’ கொண்டாட்ங்கள் ஆரம்பமாகி இரவு 11:00 மணிவரை இசைநிகழ்ச்சிகள் நடை பெறும். மேடையில் வட மாகாண சபை சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் அவர்களின் உரையும் இடம்பெறவுள்ளது.

சனிக்கிழமை ஓகஸ்ட் 27ந்திகதி கொண்டாட்டம் காலை 12:00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 11:00 வரை நடைபெறும். தவில், நாதஸ்வரம், வில்லுப்பாட்டு, பாரம்பரிய நடனம், துள்ளிசை நடனம், நவீன நடனம் எனப் பலவகை நடனங்களும், சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களும், ஆடை அலங்கார அணிவகுப்பு என பல்வேறு வீதிக் கொண்டாட்ட நிகழ்வுகளும், மேடை இசை நிகழ்ச்சியும் நடை பெறும்.

ஞாயிற்றுக்கிழமை ஓகஸ்ட் 28ந்திகதி நிகழ்ச்சிகள் காலை 11:00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 7:00 மணிக்கு முடிவடையும். ஞாயிறன்றும் பல்வேறு வீதிக்களியாட்டு நிகழ்வுகளுடன் பல்கலாச்சார நிகழ்ச்சிகள், தெருக்கூத்து என்பனவும் இடம் பெறும். ரொறன்ரோ மேயர் John Tory அவர்களும் வருகை தரவிருக்கிறார்.

15க்கும் மேற்பட்ட உணவு அங்காடிகளும், 50க்கும் மேற்பட்ட வர்த்தக, இலாப நோக்கற்ற அங்காடிகளும் இடம்பெறவுள்ளன.

இசை நிகழ்ச்சிகளை கனடாவின் பிரபல இசைக்குழுவினர்களான Mega Tuners, Super Sons, Melofunk Music & SunSea Music, BassMent Sound Crew ஆகியோரின் இசையில் கனடாவின் பிரபல பாடகர்கள் பாடுகிறார்கள். ‌சிறப்புப் பாடகர்களாக தமிழ் தெருவிழா 2016க்காக தமிழகத்திலிருந்து திரைப்படப் பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா அவர்களும், சுப்பசிங்கர் பாடகர் சந்தோஷ் ஹரிகரன் அவர்களும் வந்திருக்கிறார்கள். இவர்களோடு சமையல்கலை வல்லுனர் தாமு அவர்களும் வருகிறார்கள்.

விசேடம்:
1986ம் ஆண்டு நியூபவுண்லாந்துக்கு 155 தமிழர்கள் அகதிகளாக வந்த படகுகளில் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. இப் படகைக் காட்சிக்கு வைப்பதன் மூலம் கனடாவின் முதலாம் தலைமுறையினர் கனடா வந்து சேர பட்ட கஷ்டங்களை அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும்.

தாயகத்தில் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கான உதவிகளைத் தர கனடாவிலிருந்து செய்யப்படும் குறிப்பிட்ட வேலைத்திட்டங்களைப் ப்ற்றிய பிரபலப்படுத்தலும் அவற்றுடன் இலாப நோக்கற்ற அமைப்புக்கள் தமது சேவைகளைக் காட்சிப்படுத்தும் அங்காடிகளும் அங்கிருக்கும்.

வீதிப் போக்குவரத்தும் வாகன நிறுத்தமும்:

மார்க்கம் வீதியை மூடி நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் வீதிப்போக்குவரத்து குறித்த விசேட கரிசனை போலீஸ் படையினராலும், கனடா தமிழர் பேரவையினராலும் காட்டப்படுகிறது.
1. வாகனங்கள் நிறுக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட வீதிகளிலேயே மக்கள் தங்கள் வண்டிகளை நிறுத்த வேண்டும்.

2. தமிழர் பேரவையின் அலுவலகக் கட்டித்தின் முன்னிருந்து விசேட Shuttle Bus சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. Progress / Milner சந்தியிலிருந்து ஒவ்வொரு அரைமணி நேரமும் வண்டிகள் புறப்படும்.

3. சில வீதிகள் விசேட தடுப்புக் குழாய்கள் வைக்கப்பட்டு ‘வாகன நிறுத்தம் தடை செய்யப்பட்ட பகுதிகள்’ என காட்டப்பட்டிருப்பின் அவ்விடங்களில் வாகனங்களை நிறுத்தக் கூடாது.

4. விழாவை அண்மித்துள்ள தனியார் கடைகளுக்குரிய வாகன நிறுத்துமிடங்களில் அல்லது தனியார் நிலங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு வருவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

டேவிட் பூபாலபிள்ளை
(உத்தியோக பூர்வ பேச்சாளர், கனடியத் தமிழர் பேரவை)
416 240 0078