“அரசியல் வேறு தனிப்பட்ட விவகாரம் வேறு” என்றால், ஏன் தனிப்பட்ட வீடுகளை எரிக்க வேண்டும் ?

முகம்மத் இக்பால்…

அதாஉல்லாஹ், றிசாத் பதியுதீன் ஆகியோர்களின் போராளிகளுக்கும், முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கும் இடையில் நேரடியாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பகமையுணர்வுடன் ஏச்சு பேச்சுக்களும், வசைபாடல்களும் உச்சநிலையில் இருந்தபோது தலைவர் ரவுப் ஹக்கீமின் புதல்வியின் திருமண நிகழ்வில் அதாஉல்லாஹ்வும், றிசாத் பதியுதீனுமே முன்வரிசையில் தலைவருக்கு அருகில் இருந்தனரே தவிர, முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் அல்ல.

போராளிகள் தொடர்ந்து பகையாளிகளாகவும், தலைவர்கள் நண்பர்களாகவும் உள்ளனர். இந்த அரசியலை புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாத காரணத்தினால்தான் அவர்கள் போராளிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இங்கே வர்க்க வேறுபாடுகள் உள்ளது. அதாவது ஏழை பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன், படித்தவன் பாமரன் போன்ற பலதரப்பட்ட வேறுபாடுகள் உள்ளது. இதனை பொதுவாகவே வர்க்க வேறுபாடுகள் என்று அழைக்கப்படுகின்றது.

இந்த வர்க்க வேறுபாடுகளை பற்றி அறிய வேண்டுமென்றால் சுதந்திரத்துக்கு முன்பு டொனமூர் அரசியலமைப்பின் மூலம் சர்வஜன வாக்குரிமை வழங்க முன்வந்தபோது நடைபெற்ற வரலாறுகள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

இரு பகைமை நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்காக மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் சந்திப்புகளை மேற்கொள்ளும்போது முகத்தை பார்த்து சிரிக்க மாட்டார்கள். வற்புறுத்தலின் பேரிலேயே கை கொடுப்பார்கள். இவ்வாறு அடிக்கடி பாலஸ்தீன் – இஸ்ரேல் பேச்சுவார்த்தை மேடையில் கண்டுள்ளோம்.

அண்மையில் ரஷ்யா- உக்ரேன் பிரதிநிதிகளுக்கிடையில் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடைபெற்றபோது இரு தரப்புக்களும் முகம் பார்த்து சிரிக்கவில்லை அத்துடன் கை கொடுப்பதற்கும் மறுத்திருந்தனர்.

அதாவது மக்களையும், போராளிகளையும், தொண்டர்களையும் பகைவர்களாக்கிவிட்டு தங்களது சுயநலத்துக்கான நயவஞ்சக அரசியலை மேற்கொள்வதற்கு அந்த தலைவர்கள் விரும்பவில்லை.

இங்கே வீடுகள் எரிக்கப்பட்டபோது, சிறுவர்கள் அல்லது முதியவர்கள் தப்பிச்செல்ல முடியாமல் எரிக்கப்பட்ட வீடுகளுக்குள் அகப்பட்டிருந்தால் நிலைமை என்னாகியிருக்கும் ? அதனையும் தனிப்பட்ட விடையம் வேறு, அரசியல் வேறு என்று கூறுவதா ?

இங்கே தலைவர் ரவுப் ஹக்கீம், நசீர் அஹமட் போன்றவர்கள் முதலாளிகள் அதாவது மேட்டுக்குடி வர்க்கத்தினர். இவர்கள் மக்களை பிரித்தாளும் தந்திரத்தின் மூலமாக வாக்குகளை சூறையாடுகின்ற அரசியலை செய்து வருகின்றார்கள்.

மேட்டுக்குடி வர்க்கத்தை சேர்ந்த முதலாளிகள் தங்களது அரசியலுக்காக “அரசியல் வேறு தனிப்பட்ட விவகாரம் வேறு” என்று கூறுவது அப்பாவி ஏழைகள் முன்பாக தங்களது நயவஞ்சக நடிப்புகள் அம்பலமாகிவிடக் கூடாது என்பதற்காகவேயன்றி அதில் வேறு எந்தவித உண்மையுமில்லை.

எனவேதான் இரு மேட்டுக்குடி முதலாளிகளான தலைவர் ரவுப் ஹக்கீமும், நசீர் அஹமட்டும் கட்டிப்பிடித்து முஸாபா செய்து ஒன்றாக உணவு அருந்துவது பற்றி நாங்கள் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. இது வழக்கமாக நடைபெறுகின்ற ஒன்றுதான். நாங்கள் இதனை புரிந்துகொண்டதில்தான் தவறுகள் உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.