றஸீனுக்கு இரங்கல் தெரிவித்து சபையிலிருந்து விடைபெற்றார் மனாப் : ஊழல்கள், அதிகார துஸ்பிரயோகமில்லா சபை மலர கோரினார்.

அண்மையில் மறைந்த றஸீனுக்கு இரங்கல் தெரிவித்து சபையிலிருந்து விடைபெற்றார் மனாப் :  ஊழல்கள், அதிகார துஸ்பிரயோகமில்லா சபை மலர கோரி நீண்ட நன்றி நவிழல் நிகழ்த்தினார்.

நூருல் ஹுதா உமர்

மாநகர சபை நிர்வாக சீர்கேடுகள், கல்முனை முதல்வரின் ஊழல்கள், அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பில் பேசி, 50 மாதங்களாக உறுப்பினராக இருந்து மக்கள் பணி செய்ய வாய்ப்பளித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் உட்பட பலருக்கும் நன்றி தெரிவித்து தனது இராஜினாமாவை நேற்று மாநகர அமர்வின் பின்னர் அறிவித்து விடைபெற்றுள்ளார் கல்முனை மாநகர சபை உறுப்பினரும், இலங்கை உதைப்பாந்தாட்ட சங்கத்தின் பிரதிப்பொது செயலாளருமான எம்.ஐ.எம். அப்துல் மனாப்.

கல்முனை மாநகர முதல்வரின் தலைமையில் கூடிய மாதாந்த அமர்வில் மாநகர சபை உறுப்பினராக தனது உத்தியோகபூர்வ இறுதி உரையாக நிகழ்த்திய அவர், அண்மையில் காலமான அம்பாறை மாவட்ட வெட்மின்டன் பயிற்சியாளரும், விளையாட்டு உத்தியோகத்தருமான சகோதரர் ஏ.எம்.எம். றஸீனின் இழப்பு விளையாட்டுத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்பாகவும் மிகவும் மென்மையாகவும் பழகும் தன்மைகொண்ட விளையாட்டில் அதீத ஈடுபாடும், இளைஞர்களை பயிற்றுவிப்பதில் சிறந்த ஆற்றலும் கொண்ட அன்னாரின் இழப்பை எண்ணி கவலையடைகிறேன். அவரது இழப்பினால் துயருற்ற சகலருக்கும் கல்முனை சனிமௌண்ட் வி.கழக செயலாளர் என்ற அடிப்படையிலும், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் செயலாளர் என்ற வகையிலும், இலங்கை உதைப்பாந்தாட்ட சங்கத்தின் பிரதிப்பொது செயலாளர் என்ற அடிப்படையிலும் எனது கவலையை பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்கு இந்த மாநகர சபை உறுப்பினர் பதவியை ஒப்படைத்தபோது எந்த நிமிடமும் தலைவர் கூறினால் இராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக அறிவித்தேன். அதனடிப்படையில் 50 மாதங்கள் இந்த சபையில் உறுப்பினராக இருந்திருக்கிறேன். கல்முனை முதல்வர் என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்தாலும் கூட இங்கிருக்கும் சிலரை போன்று எவற்றுக்கும் சோரம் போகாமல் அநீதிகளை தட்டி கேட்டிருக்கிறேன். அதிகார துஸ்பிரயோகங்கள், ஊழல்கள் தொடர்பில் தர்கித்து மக்களின் சேவகனாக திருப்தியுடன் பணியாற்றி இருக்கிறேன். என்மீது முன்வைக்கப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை உடைத்தெரிந்திருக்கிறேன். 1933 முதல் கல்முனை நகரில் காலூன்றிய நாங்கள் இன்றுவரை சிறப்பாக பணியாற்ற காரணமாக இருந்த என் தாய் தந்தையை நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.

இந்த சபையை ஆளும் தரப்பு உறுப்பினர்கள் கட்சி பேதங்களை மறந்து மக்களின் நலனுக்கு குரல் கொடுத்திருந்தால் நிறைய மக்கள் சேவைகளை முதல்வர் செய்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதிகார துஸ்பிரயோகம், நியாயத்தின்பாலானவர், ஊழல்கள் இல்லாத ஒருவரையே கல்முனை மாநகர மக்கள் முதல்வராக இருத்த விரும்புகிறார்கள். இதனை மனதில் கொண்டே நிறைய ஊழல் நடவடிக்கைகள், அதிகார துஸ்பிரயோகங்ககளை என்னுடைய பதவிக்காலத்தில் தட்டிகேட்டிருக்கிறேன்.

அதற்கான வாய்ப்பை உருவாக்கித்தந்த எனது தலைவர் றிசாத் பதியுதீன், அரசியலுக்கு அழைத்து வந்து இந்த பதவியில் என்னை அமர்த்தி அழகுபார்த்த தேசிய கொள்கைப்பரப்பு செயலாளர் கே.எம்.ஏ.ஜவாத், தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,  செயலாளர் சுவைதின் ஹாஜியார், மாவட்ட செயற்குழு செயலாளர் நண்பர் மான்குட்டி ஜுனைதீன், எனக்காக வாக்களித்த மக்கள், என்னுடன் இணைந்து போட்டியிட்ட மக்கள் காங்கிரஸின் சக வேட்பாளர்கள், என்னுடன் இணைந்து தேர்தல் பணி செய்த உறவுகள், ஊடகவியலாளர்கள், மாநகரசபையில் எனது அநீதிகளுக்கு எதிரான குரலுக்கு பக்கபலமாக இருந்த மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை பிரிவின் தலைவர்கள், ஊழியர்கள் என எல்லோருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.