தென்கிழக்கு பல்கலைக்கழக இதழியல் டிப்ளோமா பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு : எம்.வை. அமீர், சுலைமான் றாபி உயர்சித்தி.

நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த 2017/18 ஆம் ஆண்டிற்கான இதழியல் டிப்ளோமா கற்கை நெறிக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (12) காலை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தலைமையில் பட்டமளிப்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் டிப்ளோமாதாரிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு முதன்முறையாக இன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயிற்சிநெறியானது, ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மற்றும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக சில வருடங்கள் காலதாமதமானதுடன்,  கடந்த வருடம் இதற்கான இறுதிப் பரீட்சை இடம்பெற்றிருந்தது. இதில் 41 மாணவர்கள் இந்தப் பரீட்சையில் சித்தியடைந்ததுடன், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.வை. அமீர் மற்றும் ஊடகவியலாளர் சுலைமான் றாபி ஆகியோர் (Distinction) உயர் சித்தி பெற்றுள்ளனர்.  அத்துடன் இவர்களுடன் இணைந்து 13 மாணவர்கள் Merrit சித்திகள் பெற்றுள்ளதுடன், ஏனையவர்களும் சித்தியடைந்துள்ளனர். இவர்களில் சிலர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா பயிற்சியைத் தொடர்வதற்கு வெளிமாகாணங்களிலிருந்து வருகை தந்து இப்பயிற்சி நெறியை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் உயர் சித்தி பெற்றவர்களான சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.வை. அமீர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் ஆய்வுகூட உத்தியோகத்தராக கடமையாற்றுவதுடன் இம்போர்ட் மிரர் இணைய செய்திச் சேவையின் பணிப்பாளராகவும் முன்னணி பத்திரிகைகளின் பிராந்திய நிருபராகவும் கடமையாற்றி வருகின்றார்.அதேபோன்று வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் சுலைமான் றாபி இலங்கையின் முன்னணி தமிழ் தேசிய நாளிதழ்களில் நிருபராக  கடமையாற்றி வருகின்றார்.
இதேவேளை இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஏ.எச். சத்தார், பீடாதிபதிகள், மொழித்துறைத் தலைவரும், இப்பயிற்சி நெறியின் இணைப்பாளருமான பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ், வெளிவாரி கற்கை நிலையத்தின் பணிப்பாளரும், பேராசிரியருமான எம்.எச். தௌபீக் உள்ளிட்ட இம் மாணவர்களுக்கு விரிவுரையாற்றிய  விரிவுரையாளர்கள், இ.ரூ.கூட்டுத்தாபன நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவின் பணிப்பாளர் யூ. எல். யாகூப், சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்க தலைவர் கலாநிதி எம்.எஸ்.எம். முபாரக், சிலோன் மீடியா போரத்தின் முக்கியஸ்தர்கள், முக்கிய ஊடக ஆளுமைகள், ஊடக அமைப்புக்களின் பிரதானிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.