திண்மக்கழிவகற்றல், வடிகான் பராமரிப்பு சேவைகளில் கல்முனை மாநகர சபை வினைத்திறனுடன் செயற்படுகிறது; ஆணையாளர் எம்.சி.அன்சார் தெரிவிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை மற்றும் வடிகான் பராமரிப்பு தொடர்பாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்த கருத்துகளில் எவ்வித உண்மையுமில்லை. எரிபொருள் தட்டுப்பாடு, நிதிப்பற்றாக்குறை என்பவற்றுக்கு மத்தியிலும் இச்சேவைகளை முன்னெடுப்பதில் கல்முனை மாநகர சபையானது மிகவும் வினைத்திறனுடன் செயற்படுகிறது என்று கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது, திண்மக்கழிவகற்றல் மற்றும் வடிகான் பராமரிப்பு சேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் இதன்போது கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் சில கருத்துகள் முன்வைக்கப்பட்டதாகவும் பேஸ்புக் மற்றும் இணையத்தளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. எமது மாநகர சபையை தொடர்புபடுத்தி அவர் அங்கு தெரிவித்ததாக கூறப்படும் கருத்துகள் முற்றிலும் தவறானவையாகும்.

திண்மக்கழிவகற்றல் சேவையும் வடிகான் பராமரிப்பும் எமது மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற மிக முக்கிய பணிகளாகும். வாகனங்கள் மற்றும் ஆளணி பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும் குப்பை கொட்டுவதற்கான இடங்கள் எமது பகுதிகளில் இல்லாத நிலையிலும் நிதிப்பற்றாக்குறைக்கு மத்தியிலும் இச்சேவைகள் முடியமானவரை வினைத்திறனுடன் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக எம்மைக் கடந்து சென்ற கொரோனா பெருந்தொற்று அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியிலும் தற்போது நாடு எதிர்நோக்கியிருக்கின்ற பாரிய பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் இதர பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மிகுந்த அர்ப்பணிப்போடு இச்சேவைகள் திருப்திகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை பொறுப்புடன் உறுதிப்படுத்துகிறேன்.

ஏனைய அரச நிறுவனங்கள் போன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கு அரசாங்க நிதியொதுக்கீடுகள் கிடைக்கப் பெறுவதில்லை. சொந்த வருமானத்திலேயே உள்ளுராட்சி மன்றங்கள் சேவையாற்ற வேண்டும். அந்த வகையில் எமது மாநகர சபையும் தனது சொந்த வருமானத்திலேயே நிர்வாக விடயங்களையும் சேவைகளையும் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.

ஆனால், கடந்த கொரோனா அசாதாரண சூழ்நிலையிலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலும் மாநகர சபைக்கான வருமானங்களில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்ற அதேவேளை எரிபொருட்களின் விலை வெகுவாக உயர்ந்திருப்பதோடு இதர செலவுகளும் அதிகரித்துள்ள சூழ்நிலையிலேயே அனைத்து சேவைகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீதியிலும் திண்மக்கழிவகற்றல் சேவையை முன்னெடுக்கவோ, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீதியிலுமுள்ள வடிகான்களை துப்பரவு செய்வதோ எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்தினாலும் இயலுமான காரியமல்ல. எமது மாநகர சபையை பொறுத்தளவில் அந்தளவு வளங்கள் கிடையாது. இருக்கின்ற வளங்களைக் கொண்டு முடியுமானவரை வினைத்திறனுடன் அவற்றை செய்து வருகிறோம்.

ஒவ்வொரு வீதியிலும் ஒரு வாரத்திற்கு இரு தடவையோ குறைந்த பட்சம் ஒரு தடவையோ திண்மக்கழிவகற்றல் சேவை முன்னெடுக்கப்படுகிறது. அதுபோன்றே மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து பிரதேசங்களிலும் உள்ள வடிகான்களும் சுழற்சி முறையில் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றன.

திண்மக்கழிவகற்றல் சேவையும் வடிகான்கள் துப்பரவு பணிகளும் இவ்வாறு கிரமமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், பொது மக்களில் சிலரது ஒத்துழைப்பின்மையும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுமே சுற்றுச்சூழல் மாசுபட காரணமாக அமைந்திருப்பதை எல்லோரும் அறிவோம். இவர்கள் நீர்நிலைகளிலும் தெருக்களிலும் பொது இடங்களிலும் தொடர்ச்சியாக குப்பைகளை வீசுவதையும் வடிகான்களினுள் கழிவு நீர் மற்றும் குப்பைகளை செலுத்துவதையும் எவரும் அறியாமல் இல்லை.

உண்மை நிலைவரம் இவ்வாறிருக்க, சுகாதாரத்துறையில் பொறுப்புவாய்ந்த பதவியில் இருக்கின்ற அதிகாரிகள், மாநகர சபை மீது மாத்திரம் விரல் நீட்டி, பொறுப்பற்ற முறையில் குற்றஞ்சாட்ட முற்படுவதானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

மேலும், குறித்த கலந்துரையாடலுக்கு கல்முனை மாநகர சபையின் முதல்வர், ஆணையாளர் அல்லது அவர்களது சார்பில் எவரும் சமூகமளிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் தவறாகும். இன்று செவ்வாய்க்கிழமை மு.ப. 10.30 மணிக்கு இடம்பெற்ற இக்கலந்துரையாடலுக்கான அழைப்புக் கடிதம் இன்று செவ்வாய்க்கிழமை மு.ப. 9.30 மணிக்கே எமக்கு கிடைக்கப் பெற்றிருந்த நிலையில், இது சுகாதாரத்துறை சார்ந்த கலந்துரையாடல் என்பதால் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பரை, இக்கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு எழுத்து மூலம் அறிவுறுத்தியிருந்தேன். அதன் பிரகாரமே மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தி அவர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தார் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்- என்று மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.