உதவுங்கரங்கள் அமைப்பினால் 80 வறிய குடும்பங்களிற்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் சமூக தொண்டு நிறுவனங்களில் ஒன்றான “வழி தேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிரும்” கிழக்கு சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின்  உதவுங்கரங்கள் அமைப்பினால் பொருளாதார நெருக்கடியான இச்சூழலில் வாழ்ந்துவரும் வறிய குடும்பங்களிற்கு உலர் உணவு பொதிகள் நேற்று (25) திகதி சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
உதவுங்கரங்கள் அமைப்பின் தலைவர் எஸ்.ஜெயராஜா தலைமையில் இடம்பெற்ற உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தரும், இந்து இளைஞர் மன்றத்தின் செயலாளருமான எஸ்.அருள்மொழி அவர்கள் கலந்துகொண்டதுடன், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர்
பொன்.விமலேஸ்வரன், மயிலம்பாவெளி கிராம உத்தியோகத்தர் ஆ.பாலகிருஷ்ணன்,
உதவுங்கரங்கள் அமைப்பின் செயலாளர் இ.முகுந்தன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டு
உதவும் கரங்கள் மாணவர்களின்  குடும்பங்களுக்கான  நிவாரணப் பொதிகளை வழங்கியிருந்தனர்.
இதன் போது மயிலம்பாவெளி,  தன்னாமுனை, சவுக்கடி, ஆறுமுகத்தான்குடியிருப்பு மற்றும் விநாயகபுரம்  போன்ற கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட உதவும் கரங்கள் மாணவர்களின் 80 குடும்பங்களிற்கு ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட பெறுமதிமிக்க  நிவாரணப் பொதிகள்  வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
“தமிழன் தலைநிமிர்ந்து வாழ வழிவகுப்பகு கல்வியொன்றே” என குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தரும், இந்து இளைஞர் மன்றத்தின் செயலாளருமான எஸ்.அருள்மொழி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் இங்கு கருத்து தெரிவிக்கையில்,
கல்வி கற்பிக்க உதவும் கரங்கள் போன்ற சமூக தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றவரைக்கும் எமது சமூகம் கல்வியில் சிறந்து விளங்கும், அத்தோடு எமது சமூக சேவை உத்தியோகத்தரை நாடும் வேளையில் அரசினால் ஆற்றக்கூடிய பல்வேறுபட்ட சேவைகளை முடியுமானவரை அவர் பெற்றுத்தருவார்.
அதுமட்டுமல்லாது இந்த இறுக்கமான காலகட்டத்தில் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டுமாயின் ஒவ்வொரு வீட்டிலும் பயன்தரும் பயிர் மரங்களை நடுங்கள் அதன் ஊடாகவே எதிர்காலத்தில் நாம் பயன்பெறலாம், அப்போதுதான் எமது வாழ்வு வளமாகும். அதுமட்டுமல்லாது இங்கு கல்வி கற்கும் மாணவர்களும்
ஒழுக்கத்துடனான சிறந்த கல்வியை தொடர்வது காலத்தின் கட்டாயமெனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.