இலங்கையில் பொருளாதார நெருக்கடி: ஆஸ்திரேலியாவுக்கு படகில் செல்ல முயன்ற 51 பேர் கைது, ஒரே வாரத்தில் நான்காவது படகு தடுத்து நிறுத்தம் 

 

இலங்கையின் கிழக்கு கடற்பகுதியான திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சட்ட விரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு மீன்பிடி படகு மூலம் பயணிக்க முயன்ற 51 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதில் 41 பேர் ஆண்கள், 05 பேர் பெண்கள், 05 பேர் குழந்தைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 06 பேர் சட்டவிரோத பயணத்திற்கான ஏற்பாட்டாளர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, கம்பகா, மற்றும் ரத்னபுரா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். 

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உணவுத் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தஞ்சக்கோரிக்கையாளர்களை உள்ளடக்கிய நான்கு படகுகள் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றுள்ளன. 

அந்த வகையில், கடந்த ஜூலை 2ம் தேதி இலங்கையின் மேற்கு கடற்பகுதியான மாரவிலயிலிருந்து படகில் சென்ற 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அதே போல், கடந்த ஜூன் 27ம் தேதி மேற்கு கடற்பகுதியான நீர்கொழும்பில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 47 பேரும் கிழக்கு கடற்பகுதியான மட்டக்களப்பிலிருந்து செல்ல முயன்ற 54 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள கண்காணிப்புகளை மீறி ஆஸ்திரேலியாவின் கடற்பகுதியில் தஞ்சமடையும் இலங்கையர்கள் தொடர்ந்து நாடுகடத்தப்பட்டு வருவதுடன் கடல் வழியாக தஞ்சமடைபவர்களுக்கு கடுமையான எச்சரிக்கைகளை ஆஸ்திரேலிய அரசு விடுத்து வருகிறது.

படங்கள்: இலங்கை கடற்படை 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.