பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நான்கு ஆண்டுகள் தேவை

இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நான்கு ஆண்டுகள் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதில் முதலாவது வருடமே கடுமையான காலம் என்று அந்த நிதியம் குறிப்பிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட காணொளியிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமக்கென உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்த ஒரே வீடு இன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் இதில் அதிகமாக அழிந்துபோன சொத்துக்கள் தமது நூல்களாகும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

போர்த்துகேயர் காலம் மற்றும் ஒல்லாந்து கால நூல்கள் உட்பட்ட 2500 நூல்கள் அதில் இருந்தன. தனது காலத்தின் பின்னர் இந்த நூல்களை நாட்டின் பல இடங்களிலும் அன்பளிப்பாக வழங்குவதற்கு தாம் தீர்மானித்திருந்ததாகவும் அதனை விட பழங்காலத்து சித்திரங்கள் இருந்ததாகவும் எனினும் தற்போது ஒரேயொரு சித்திரமே தம்மிடம் எஞ்சியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது, சர்வகட்சி அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுமானால், தாம் பிரதமர் பதவியிலிருந்து விலகிக்கொள்ளத் தயார் என்பதை அறிவித்ததாகவும் ரணில் விக்கிரமசிங்க காணொளியில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.