அடுத்த கட்ட விநியோகத்தின் போது எரிபொருள் விநியோக அட்டை அவசியம்-மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீபன்.

சாவகச்சேரி நிருபர்
பொதுமக்கள் அடுத்த கட்டமாக எரிபொருள் பெற வரும் போது கட்டாயம் பிரதேச செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோக அட்டையை வைத்திருக்க வேண்டுமென யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
08/07 வெள்ளிக்கிழமை இரவு சாவகச்சேரி ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற பெற்றோல் விநியோகத்தை மேற்பார்வை செய்ய வந்திருந்த போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
சாவகச்சேரி ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆயிரம் மோட்டார்சைக்கிள்களுக்கு ஆயிரம் ரூபா வீதமும்,300முச்சக்கரவண்டிகளுக்கு இரண்டாயிரம் ரூபா வீதமும்,50கார்களுக்கு மூவாயிரம் ரூபா வீதமும் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதனை விட மேலதிகமாக வரிசையில் நிற்கின்ற மோட்டார்சைக்கிள்கள்,முச்சக்கரவண்டிகள் மற்றும் கார்களுடைய உரிமையாளர்களின் பெயர்,வாகன இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியன பதிவு செய்யப்பட்டுள்ளது.அவர்களுக்கு அடுத்த கட்டமாக எரிபொருள் கிடைத்த தகவல் மாவட்ட செயலகத்திற்கு கிடைக்கப்பெற்றவுடன் குறுஞ்செய்தி மூலம் தகவல் வழங்கப்படும். அப்போது எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அவ்வாறு அவர்கள் எரிபொருளைப் பெற வரும் போது கட்டாயமாக பிரதேச செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோக அட்டையை வைத்திருக்க வேண்டும்.குறித்த அட்டை இல்லாதவர்களுக்கு எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படமாட்டாது.அட்டையை பயன்படுத்தியே எதிர்காலத்தில் ஒரு நபர் தொடர்ச்சியாக எரிபொருள் பெறவதனை தடுக்க முடியும்.
அதனை விட எதிர்காலத்தில் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு அந்த செயலி ஊடாக எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.செயலி ஊடாக பதிவு செய்ய இயலாதவர்கள் தங்கள் பிரிவு கிராம மட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊடாக குறித்த செயலியில் தமது பதிவை மேற்கொள்ள முடியும்.அதனடிப்படையில் ஆங்கில மொழியில் எரிபொருள் நிரப்பு நிலையம்,எரிபொருள் பெற வேண்டிய நேரம்,திகதி அடங்கிய குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்றதும் ஒழுங்கு முறையில் எரிபொருளைப் பெற முடியும். என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.