சிறுபான்மையின மக்களுக்கான- கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி மல்லாகத்தில் போராட்டம்.

சாவகச்சேரி நிருபர்
சிறுபான்மையின மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு கோரியும்-மல்லாகம் நீதவான் நலன்புரி நிலைய மக்களை மீள சொந்த இடத்தில் குடியமர்த்தக் கோரியும் அண்மையில் மல்லாகம் நீதவான் நலன்புரி நிலையத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு -கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு அமைப்பின் ஏற்பாட்டில் கௌரவமான அரசியல் தீர்வு கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற 100நாள் செயல் முனைவுப் போராட்டத்தின் 67ஆம் நாள் நிகழ்வு நலன்புரி நிலையத்தில் அம் மக்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றிருந்தது.
போராட்டத்தில் கலந்து கொண்ட நலன்புரி நிலைய மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்;
நாம் 32வருடங்களாக நலன்புரி நிலையத்தில் வாழ்ந்து வருகிறோம்.பெரும் கஸ்டத்தின் மத்தியிலேயே இங்கு வாழ்ந்து வருகிறோம்.எமது பூர்வீக இடமான காளான் காட்டுப் பகுதியை அரசாங்கம் விடுவிக்கும் பட்சத்தில் நாம் அங்கு விவசாயம்-கடற்தொழில் போன்ற தொழில்களில் ஈடுபட முடியும்.எனச் சுட்டிக்காட்டியிருந்தனர்.
நிகழ்வில் வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்பு அமைப்பு சார்பாக கலந்து கொண்ட சட்டத்தரணி அம்பிகா சிறிதரன் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்;
எமக்கு உரிய அதிகாரம் வழங்கப்படாத நிலையில் சிறுபான்மையினராகிய நாம் மத்திய அரசை எதிர்பார்த்து வாழ வேண்டியவர்களாகவே உள்ளோம்.குறிப்பாக இடம்பெயர்ந்த மக்களை மீள அவர்களுடைய சொந்த இடத்தில் குடியமர்த்துவதற்கான அதிகாரம் சிறுபான்மையினரிடம் இல்லை.தமிழ் மக்களுக்கு எங்களுடைய விடயங்களை நாமே கையாளக்கூடிய விதத்தில் கௌரவமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்.அதையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.எனத் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.