விடுதலைப் புலிகளின் தலைவருக்கான ஆதரவு – மகிந்தவின் சகா வெளியிட்ட தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இருந்த காவல்துறை மற்றும் கடற்படையின் ஆதரவு வேறு எந்தவொரு இயக்கத்திற்கும் இதுவரை கிடைக்கவில்லையென பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸ்ஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான இயக்கத்தை தோற்கடித்து, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச போரை வெல்லும் போது நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சி கண்டதாகவும் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் எஸ். பி. திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார வீழ்ச்சி
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கையின் பொருளாதாரம் கடந்த 2009 ஆம் ஆண்டு முழுமையாக வீழ்ச்சி கண்டிருந்தது.
எனினும் 2012 ஆம் ஆண்டு இது மாற்றமடைந்ததுடன் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி சீனாவுக்கு அடுத்தபடியாக வளர்ச்சி கண்டிருந்தது.
2010 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஆசியாவிலே மிக வேகமாக அபிவிருத்தியடைந்து வந்த நாடக இலங்கை திகழ்ந்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தச் சட்டம் போன்ற விடயங்களால் இலங்கையின் அனைத்து துறைகளும் பாரியளவில் பாதிக்கப்பட்டன. இவ்வாறான காலகட்டத்திலே நாட்டின் அதிபராக கோட்டாபய ராஜபக்ச பொறுப்பேற்றார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் நிமிர்த்தம் அவர் பதவி விலகியதுடன் ரணில் விக்ரமசிங்க நாட்டின் அதிபராக பொறுப்பேற்றார்.
ரணில் விக்ரமசிங்க தற்போது நாட்டை கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார். இதை இல்லாது செய்ய இலங்கையின் இளைஞர்கள் முயற்சிக்க கூடாது.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி
மாறாக இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்துக்கு தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கப் பெறுவது குறித்து அதிக அளவில் கவனம் செலுத்த தேவையில்லை.
சிறிலங்கா பொதுஜன பெரமுன பல தடைகளைத் தாண்டி ரணில் விக்ரமசிங்கவை அதிபராக நியமித்தது. அவ்வாறாக நியமிக்கப்பட்டவரின் அபிவிருத்தி செயற்பாடுகளை எதிர்க்காது அதை நாம் ஆதரிக்க வேண்டும்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை