உவர் நிலங்களாக மாறும் அபாயத்தில் யாழ் வயல்கள் – மக்கள் குற்றச்சாட்டு

வடக்கில் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டதால் வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாறும் அபாயம் நிலவுவதாகப் பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அல்லைப்பிட்டிப் பகுதியில் அமைக்கப்பட உள்ள தனியார் வீடமைப்புத் தொகுதியால் அருகிலுள்ள வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இப்பகுதியில் சுமார் 70 குடியிருப்புகள் அமைக்கப்படவுள்ளதாக அப்பிரதேச மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

மண் அகழ்வு

உவர் நிலங்களாக மாறும் அபாயத்தில் யாழ் வயல்கள் - மக்கள் குற்றச்சாட்டு | Jaffna Velanai Water Issues Come Future Project

 

“சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட உள்ள குறித்த வீட்டு தொகுதிக்கான வீதியானது உவர் நீர் தடுப்பணைக்கு அருகாமையில் செல்கின்ற நிலையில் தடுப்பணைக்கு அருகாமையில் சுமார் 2 அடி ஆழத்தில் மண் தோண்டப்பட்டு வீதியின் அருகே அமைக்கப்படுகிறது.

பாரிய நிதிச் செலவில் அமைக்கப்பட உள்ள குடியிருப்பு திட்டத்திற்கு செல்லும் வீதிக்கு அருகில் உள்ள தடுப்பணையின் கீழ் பகுதியில் இருந்து பெறப்படும் மண்ணே தடுப்பணைக்கு பயன்படுகின்றது.

இவ்வாறு தடுப்பணையின் அருகில் மண் அகழ்வு இடம்பெறுவதால் கடல் நீர் உள்வரும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் எதிர் காலத்தில் வயல்நிலங்களும் உவர்நீர் ஆகிவிடும்.

குறித்த பகுதியில் நெற்பயிர் செய்கையை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் குடும்பங்கள் முழுமையாகப் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

பனை மரங்கள் எரியூட்டல்

உவர் நிலங்களாக மாறும் அபாயத்தில் யாழ் வயல்கள் - மக்கள் குற்றச்சாட்டு | Jaffna Velanai Water Issues Come Future Project

அதுமட்டுமல்லாது குறித்த புதிய குடியிருப்பு தொகுதியில் நான்குக்கு மேற்பட்ட ஆழ்துளைக் குழாய் கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாக அறிய கிடைக்கும் நிலையில் குறித்த பகுதி முழுமையாக உவர்நீராக மாறும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

குறித்த திட்டத்துக்காக வேலனை பிரதேச செயலாளரின் அனுமதி உடன் அரச காணி ஒன்றின் ஊடாக இரண்டாவது பாதை அமைக்கப்படவுள்ள நிலையில் வயல் நிலங்களில் இருந்து வெளியேறும் மேலதிக நீரின் திசைகள் மாற்றமடைவதுடன் நீர் தேங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் குறித்த திட்டத்துக்காக அப்பகுதியில் இருந்த பனை மரங்கள் வெட்டப்பட்டு இரவோடு இரவாக எரியூட்டப்பட்டது.

ஆகவே வயல் நிலங்களும் விவசாயிகளும் பாதிக்கப்படாமல் குறித்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.