சர்வ கட்சி அரசாங்கம் உருவாகும் போது மாத்திரமே அரசியல் தீர்வு சாத்தியமாகும்-அங்கஜன் இராமநாதன்

சாவகச்சேரி நிருபர்

 

அனைத்து கட்சி அரசாங்கம் ஒன்று உருவாகும் போது மாத்திரமே அரசியல் தீர்வு சாத்தியமாகும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

21/11 திங்கட்கிழமை பாராளுமன்றத்தில், நாட்டின் 77வது வரவு-செலவுத்திட்டம் மீதான உரையை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக பாராளுமன்றில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
நாடு சுதந்திரமடைந்த பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள வேளையில் இந்த வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு யுத்தம் மற்றும் அதன் பின்னரான பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டெழ முடியாமல் தவிக்கும் வடக்கு வாழ் மக்களின் பிரதிநிதியாகவே எனது இந்த உரை அமைகிறது.
இந்த வரவு-செலவுத்திட்டம் கொள்கை ரீதியான பட்ஜெட்டாக மாத்திரமே அமைகிறது.மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட் இதுவல்ல.
நிகழ்காலத்தை மீட்காமல் எதிர்காலத்தை சிந்திக்கும் பட்ஜெட்டாகவே இது அமைகிறது.
மக்களை மீட்டெடுக்காமல் எதிர்காலத்தை கொள்கை அளவில் மாத்திரம் சிந்திப்பதனை ஏற்க முடியாது.
37இலட்சம் குடும்பங்கள் நிவாரணம் கோரி விண்ணப்பித்துள்ளன.மாதாந்தம் 5000ரூபாய் நிவாரணம் எப்படி போதும்?நடுத்தர வருமானமுடைய குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் செல்கின்றன.
இழக்கப்படும் மனித உழைப்புகளும்-அதன் மூலமான வருமானங்களையும்  எப்போதும் முள பெற முடியாது.இன ஒற்றுமையையும்-இன உரிமையையும் மதிக்காததால் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தால் 32ஆண்டு கால மனித நேரம் மற்றும் முதலீடுகள் அதனூடான வருமானங்கள் இழக்கப்பட்டுள்ளன.
இதனை உணர்ந்து எதிர்காலத்திலாவது நாட்டின் சகல கொள்கை வகுப்புக்களிலும் சகல தரப்பினரும் பங்கெடுக்க வேண்டும்.
அரசாங்கம் மீது மக்களுக்கு நம்பிக்கை மலர வேண்டும்.அதற்கு ஒரே தீர்வு மக்கள் கோரும் சர்வ கட்சி ஆட்சி முறை தான்.இதனையே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் தொடர்ச்சியாக முன்மொழிகிறது.
தற்போது அரசியல் தீர்வு பற்றி பேசப்படுகிறது.அந்த அரசியல் தீர்வு கூட அனைத்துக் கட்சி அரசாங்கம் அமையும் போது மாத்திரமே சாத்தியமாகும்.தற்போதைய நெருக்கடி நிலைமையும் அப்போது தான் முடிவுக்கு வரும்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.