அரசியல் துறையின் அளவுக்கு மீறிய அத்துமீறலும், அரசியல் செல்வாக்கின் காரணமாகவுமே நாட்டின் கல்வித்துறை வீழ்ச்சியடைந்து வந்துள்ளது. …(பாராளுமன்ற உறுப்பினர் – கோவிந்தன் கருணாகரம் ஜனா)

(சுமன்)

ஒரு காலத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் கல்வித்துறைக்கு சமமாக மாத்திரமல்ல சவால் விடுகின்ற அளவுக்கு பெருமையடையக்கூடிய விதத்தில் இருந்த எமது நாட்டின் கல்வித்துறை 1972ஆம் ஆண்டு குடியரசு என பெருமைப்பட்டு உருவாக்கிய அரசியலமைப்பின் மூலம் இன்றுவரை கல்வித்துறையில் அரசியல் துறையின் அளவுக்கு மீறிய அத்துமீறலும், அரசியல் செல்வாக்கினாலும் மோசமாக வீழ்ச்சியடைந்து வந்துள்ளது. இதுதான் டொமினியன் அந்தஸ்திலிருந்து குடியரசாகிய பின்னர் நாம், நமக்கு ஏற்படுத்திக் கொண்ட பெருமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

அரச பல்கலைக்கழகங்களில் திறமை அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதியை அதிகரித்தல் என்ற நிதியமைச்சரின் முன்மொழிவையும், இந்த விடயத்தின் தார்ப்பரியத்தை ஜனாதிபதியவர்கள் தற்போது உணர்ந்துள்ளமைமையையும் நான் வரவேற்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கல்வி அமைச்சு, மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதலாவதாக இலங்கையில் உள்ள நூறு கல்வி வலயங்களுக்குள் தற்போது வெளியாகிய சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயம் முதலாவது இடத்தைப் பிடித்திருப்பதையொட்டி மட்டக்களப்பு வலயக் கல்;விப் பணிப்பாளர், கோட்டக் கல்வி அதிகாரிகள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர், மாணவர்கள் என அனைவருக்கும் எனது நன்றியையும், மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று கல்வி அமைச்சு, மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டிருக்கின்றோம். இந்த அமைச்சுக்கள் தொடர்பான விடயப் பரப்பு எமது நாட்டின் சகல துறைகளிலும் செல்வாக்குச் செலுத்தும், தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய அமைச்சுக்களாகும். நாட்டின் நிகழ்கால நிலைமை மாத்திரமல்ல எதிர்கால நிலைமையினையும் வலுப்படுத்துகின்ற முக்கிய துறைசார் அமைச்சுக்கள் இவையாகும்.

எமது நாட்டின் கல்வித்துறை ஒரு காலத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் கல்வித்துறைக்கு சமமாக மாத்திரமல்ல சவால் விடுகின்ற அளவுக்கு பெருமையடையக்கூடிய விதத்தில் இருந்தது. ஆனால், தமது வரவு செலவுத்திட்ட உரையில் நிதி அமைச்சரும் மேதகு ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சுதந்திரத்தின் பின்னர் 75 வருடங்கள் கடந்து செல்லுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் எமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து எம்மால் திருப்திப்பட முடியுமா என வினவினார். நாங்கள் எங்கே தவறுவிட்டோம் என்று வினவினார். எங்களுக்குத் தவறிய இடம் எது எனவும் வினவினார்.

கல்வி அமைச்சு, மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுக்கள் தொடர்பான நடவடிக்கைகளில் நாம் சுதந்திரத்துக்குப் பின்னர் திருப்தி அடையக்கூடிய வகையில் முன்னேறியுள்ளோமா? என நான் வினவுகின்றேன்.

சுதந்திரத்துக்குப் பின்னரான டொமினியன் அந்தஸ்த்துக் காலத்தில் அரசாங்கத்தில் வலுவேறாக்கல் கொள்கை மற்றும் அதிகாரப் பகிர்வுடன்முறையான அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதனால் அரச துறையில் 4சமநிலை தலையீடுகள் நிலைமை பேணப்பட்டு வந்தது. ஆனால், 1972ஆம் ஆண்டு குடியரசு என பெருமைப்பட்டு ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, இன்றுவரை கல்வித்துறையில் அரசியல் செல்வாக்கும், அரசியல்வாதிகளின் செல்வாக்கும், அரசாங்கக் கட்சி எம்பிக்களின் செல்வாக்கும், அவர்களின் அடிவருடிகளின் செல்வாக்கும் பூரணமாக உள் நுழையத் தொடங்கியது. இதுதான் டொமினியன் அந்தஸ்திலிருந்து குடியரசாகிய பின்னர் நாம், நமக்கு ஏற்படுத்திக் கொண்ட பெருமை இதற்கு கல்வி அமைச்சும் விதிவிலக்கல்ல.

இன்று, எமது கல்வித்துறை நாம் பெருமைப்படத்தக்க நிலையில் இருக்கின்றதா? நான் இதற்காக கல்வி அமைச்சரை விரல் நீட்டி குற்றம் சாட்டவில்லை. அவர் திறமையானவர். அவரது திறமையில் எனக்கு நம்பிக்கையுண்டு. ஆனால், கல்வித் துறையில் நடப்பது என்ன? அரசியல் துறையின் அளவுக்கு மீறிய அத்துமீறலும், அரசியல் செல்வாக்கின் காரணமாகவும் எமது நாட்டின் கல்வித்துறை வீழ்ச்சியடைந்து வந்துள்ளது. எதற்கெடுத்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேர்மறையாக விமர்சிக்கின்றது. நேர்மறையாக சிந்திக்கிறது என்று எம்மீது இலகுவாக குற்றஞ்சாட்டி நீங்கள் தப்பிவிடுவீர்கள். ஆனால், யதார்த்தம் அதுவல்ல. நாங்கள் யதார்த்தத்தைக் கண்டு யதார்த்தத்தை உணர்ந்து யதார்த்தத்தை உரைக்கின்றோம். உண்மை சிலவேளை உங்களுக்கு கசக்கத்தான் செய்யும். ஆனால், இதுவே கல்வித்துறையின் இன்றைய யதார்த்தம்.

கல்வி அமைச்சின் கீழ் இருக்கின்ற திணைக்களங்களையும் நிறுவனங்களையும் நோக்கினால் எமது நாட்டின் அபிவிருத்திக்கு இவை எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்வீர்கள். ஆனால். இந்த திணைக்களங்களிலும், நிறுவனங்களிலும் தலைமைகள் முதல் சிற்றூழியர்கள் வரை நியமனம் செய்யப்படுவது சேவை மூப்பு அடிப்படையிலோ, கல்வித் தகமை அடிப்படையிலோ இல்லை. இன விகிதாசார அடிப்படையிலும் இல்லை. அந்த பிரதேசத்தின், அந்த தேர்தல் தொகுதியின், அந்த மாவட்டத்தின், அந்த மாகாணத்தின் அரசாங்கம் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினரோ, அமைச்சரோ, அவரவர் தேவைக்கேற்ப பாடசாலை அதிபர் தொடக்கம் நிறுவனங்களின் உயர் தலைவர் வரை நியமனம் செய்கின்றீர்கள். இன்னும் கூறப்போனால், பாடசாலை அதிபர் இருந்து ஆசிரிய ஆலோசகர் ஈறாக கோட்டக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் வரை அரசியல் ரீதியான நியமனங்களாகவே இருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாவிடினும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இன்று வடகிழக்கில் கல்வி திணைக்களங்களின் செயற்பாடுகள் எம்மால் திருப்திப்படக்கூடிய வகையில் இல்லை. இவை வடகிழக்கு வாழ் அரசாங்க சார்பு அரசியல்வாதிகளை திருப்திப்படுத்துவதற்காக மட்டும் உள்ளதே ஒழிய மாணவர் நலனோ, கல்வி அபிவிருத்தி நலனோ இல்லை. பதவியிலிருப்பவர் அடுத்த பதவியுயர்வினை எடுப்பதற்காக அந்த அரசியல்வாதியின் காலடியில் விழும் நிலையில் இருந்தால் எமது நாட்டின் கல்வியின் நிலை எப்படி உயரும்? எப்படியொரு கல்வியினால் உயர்ந்த ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும்? உண்மையிலேயே எனது மாகாணத்தில் கல்வித் துறை சார் நிருவாகம் தொடர்பாக நடைபெறுகின்ற சீர்கேடுகளை இந்த உயரிய சபையில் எடுத்துரைப்பதற்கான சந்தர்ப்பமாக இதனை நான் கருதுகின்றேன். இது எவர் மீதும் கொண்ட காழ்ப்புணர்ச்சியோ, தனிப்பட்ட குரோதமோ அல்ல. எமது மக்களின் பிரதிநிதி என்ற வகையில் எனக்கு இருக்கின்ற தார்மீகப் பொறுப்பின் வெளிப்பாடே இதுவாகும்.

அரச பல்கலைக்கழகங்களில் திறமை அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதியை அதிகரித்தல் என்ற நிதியமைச்சரின் முன்மொழிவை நான் வரவேற்கின்றேன். ஏனெனில், இந்த நாடு இனப்பிரச்சினை என்ற பெயரில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி தம் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான முதல் காரணியே அரச பல்கலைக்கழக அனுமதியில் திறமையைப் புறக்கணித்து மாவட்ட விகிதாசாரக் கோட்டாவினைக் கொண்டு வந்ததேயாகும். இதனை, இதன் உண்மைத் தன்மையின் தார்ப்பரியத்தை எமது ஜனாதிபதியவர்கள் உணர்ந்துள்ளமைமையை வரவேற்கின்றேன்.

இலங்கைளயில் தேசிய கல்வி நிறுவகம் கடந்த முப்பது வருடங்களாக இயங்குகின்றது. 1985ம் ஆண்டு 25ம் இலக்க சட்டத்தின்படி இலங்கையிலுள்ள ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கவும் அவர்களுக்குத் தொழில் அங்கீகரச் சான்றிதழ்களை வழங்கவும் தேசிய கல்வி நிறுவகத்திற்குத் தான் அதிகாரம் இருக்கின்றது. தற்போது அத்தேசிய கல்வி நிறுவகங்களை பல்கலைக்கழகம் ஆக்குவதற்கான யோசனை எழுந்துள்ளது. இந்தியா, மலேசியா, அமெரிக்காவில் இருப்பதைப் போன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஒரு தேசிய கல்விப் பல்கலைக்கழகமாக மாற்றலாம். இங்கு 24 கலாநிதிப் பட்டப்படிப்பை முடித்தவர்களும், பாரிய கட்டிட மற்றும் இதர வசதிகளும் இருப்பதனால் இலகுவாக இதனை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

அதேபோல் பத்தொன்பது தேசிய கல்விக் கல்லூரிகளையும் இணைத்து அதனையும் உங்கள் யோசனையின் படி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழவின் கீழ் ஒரு பல்கலைக்கழகமாக மாற்றலாம். ஆனால் 2019, 2020 களிலே தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்குத் தெரிவான மாணவர்களிலும் பார்க்க இவ்வருடம் இரட்டிப்பான மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிய வருகின்றது. ஒரு ஆசிரிய மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு தற்போது ஐயாயிரம் ரூபாய் தான் ஒதுக்கப்படுகின்றது. தற்போதைய பொருளாதாரச் சூழலிலே ஒருநாளைக்கு நூற்றுஅறுபது ரூபாய்களே கிடைக்கின்றன. இதிலேயே அவர்களின் ஒருநாளைக்கான மூன்றுவேளை சாப்பாடு உட்பட இதர செலவுகளும் அடங்குகின்றன. எனவே இந்த ஐயாயிரம் ரூபா விடயத்தில் அமைச்சர் அவர்கள் கவனம் செலுத்தி அந்த ஆசிரியர்கள் போசாக்கான ஆசிரியர்களாக வெளிவந்து கற்பிப்பதற்காக ஆவன செய்ய வேண்டும்.

அது மட்டுமலல்லாமல், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் ஜெய்கா திட்டம் ஊடாக ஜப்பானில் விசேட கல்வியினைப் பயிற்றுவிப்பதற்காக விணப்பம் கோரியிருந்தார்கள். அந்த வெளிநாட்டு வளங்கள் திணைக்கம் 2022.11.09ம் திகதியிட்டு கல்வி அமைச்சிற்கு அந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தார்கள். ஆனால் கல்வி அமைச்சு மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு 2022.11.21ம் திகதியே அதற்குரிய கடிதத்தை அனுப்பியிருக்கின்றார்கள். அந்தக் கடிதங்கள் அந்தந்த வலயங்களுக்கு 22ம் திகதியே கிடைத்திருக்கிறது. ஆனால், அந்த விண்ணப்ப முடிவுத்திகதியோ 23ம் திகதியுடன் முடிவடைகின்றது. இவ்வாறிருக்க சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அந்த விடயம் 23ம் திகதி காலை 10.00 மணிக்கே அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது பகல் 01.00 மணிக்கு முதல் விண்ணப்பிக்க வேண்டும் என்று. இவ்வாறு மூன்று மணி நேர கால அவகாசத்தில் விண்ணப்பிக்கச் சொன்னால் அவர்கள் தங்களது விடயங்களை எவ்வாறு தேடி எடுப்பார்கள். இது கிழக்கு மாகாணத்தில் மாத்திரமல்ல ஒட்டுமொத்த இலங்கையிலுள்ள அனைத்து ஆசிரியர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியாமல் இந்த நாட்டிலிருந்து எவரும் ஜெய்கா திட்டத்தின் விசேட பயிற்சிக்கு செல்ல முடியாமல் போயுள்ளமை மிகவும் கவலையான விடயம் என்று தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.