நாட்டின் உணவுப் பற்றாக்குறையைப் போக்க வடக்கு-கிழக்கு விவசாய நிலங்கள் போதும்-அங்கஜன் எம்.பி

சாவகச்சேரி நிருபர்
நாட்டில் நிலவி வருகின்ற உணவுப் பற்றாக்குறையை போக்க வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள விவசாய நிலங்கள் போதும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் தெரிவித்துள்ளார்.
 கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2023ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.நாட்டின் 30சதவீத நிலப்பரப்பைக் கொண்ட வடக்கு-கிழக்கு மாகாணங்களின் விளை நிலங்களில் விளைச்சலை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும்.இருப்பினும் சில தரப்பினரின் அசமந்த போக்கு காரணமாக விளைநிலங்கள் இருந்தும் அது நாட்டு மக்களுக்கு பலனளிக்கவில்லை.யுத்தம் நடந்த பிரதேசமாக இருந்தாலும் இன்றும் வடக்கில் அழிவடையாத காடுகள் உள்ளன.அதனை பாதுகாப்பதனை விடுத்து மக்களுடைய காணிகளை காடுகளாக்கி காணி பிடிக்கும் செயற்பாடுகளே இங்கு இடம்பெறுகிறது.
வனபாதுகாப்பு சுவீகரிப்புக்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இவ்வாறு அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படும் என காலத்திற்கு காலம் மாறுகின்ற அரசாங்கங்கள் மற்றும் அமைச்சர்கள் கூறிக்கொண்டாலும் இந்தப் பிரச்சனை முழுமையாக தீரவில்லை.செயற்படுத்த வேண்டிய இடத்தில் உள்ள அதிகாரிகளின் அசமந்தப் போக்கே மக்கள் அல்லல்பட காரணம் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.