உதவிகளை பெற்றுக் கொள்வதற்கான இலங்கையின் கோரிக்கைக்கு உலக வங்கி ஒப்புதல்

சர்வதேச அபிவிருத்தி ஒன்றியத்திடம் இருந்து சலுகையுடனான உதவிகளை பெற்றுக் கொள்வதற்கான இலங்கையின் கோரிக்கைக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

குறைந்த வட்டி வீதத்தில் வழங்கப்படும் இந்த நிதியுதவியானது, நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், வறுமை மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்குமான அரசாங்கத்தின் மறுசீரமைப்பு திட்டத்தை செயற்படுத்துவதற்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் ஒப்புதலுக்கு அமைய இலங்கை தற்போது சர்வதேச அபிவிருத்தி ஒன்றியத்தின் அங்கத்துவ நாடாக மாறுகிறது.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள உலக வங்கியின் அபிவிருத்தி நிதிக்கான துணை தலைவர் அகிஹிகோ நிஷியோ, நெருக்கடியான நேரத்தில் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு உறுதிபூண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த செயற்பாடு வறுமையை குறைத்து பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும்.

நிலையான வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்கும் சீர்திருத்தங்களை செயற்படுத்தும் இலங்கைக்கு ஆதரவளிக்க உலக வங்கி தயாராகவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இலங்கை தமது பொருளாதார மீட்சி மற்றும் பொருளாதார சுபீட்சத்துக்கான மறுசீரமைப்புகளை அமுல்படுத்தி வரும் நிலையில், அதற்கு உலக வங்கி, சர்வதேச அபிவிருத்தி ஒன்றியம் ஊடாக நிதியுதவி, தொழில்நுட்ப உதவி, கொள்கை ஆலோசனை என்பவற்றை வழங்கவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.