நாவற்குளியில் திருட்டுக்கும்பல் அட்டகாசம் – மடக்கிப்பிடித்த மக்கள்..

யாழ்.நகரில் இருந்து வாடகை முச்சக்கரவண்டியில் வந்த திருட்டுக் கும்பல் முச்சக்கரவண்டி சாரதியின் நகைகள் மற்றும் பணங்களை அச்சுறுத்தி கொள்ளையிட்டு தப்பிச் செல்ல முயற்சிக்கையில் மக்கள் மற்றும் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குளி பாலத்திற்கு அருகில்  நேற்று(06) இடம்பெற்றது.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
யாழ் நகரில் இருந்து சாவகச்சேரி செல்வதாக தெரிவித்து வாடகை முச்சக்கர வண்டி ஒன்றில் இருவர் பயணித்துள்ளனர்.

நாவற்குழி பாலத்திற்கு அண்மையில் முச்சக்கரவண்டி வந்ததும் குறித்த இருவரும் முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு தெரிவித்து பணம் தருவதாக கீழே இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், முச்சக்கரவண்டி சாரதியை இருவரும் தாக்கி அவரிடம் இருந்த நகைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்துகொண்டு குறித்த முச்சக்கர வண்டிக்கு பின்னால் வந்த திருட்டுக் கும்பலின் முச்சக்கர வண்டியில் ஏறி தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.

இதன்போது வீதியால் வந்த மக்களும், பிரதேச இளைஞர்களும் ஒன்று சேர்ந்து சம்பவம் நடந்த இடத்திலேயே திருட்டுக்கும்பலைச் சேர்ந்த இருவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

மற்றைய முச்சக்கர வண்டியில் வந்த மூவரும் தப்பியோடியுள்ளனர். இந்நிலையில் சாவகச்சேரி பொலிஸாரும், பிரதேச இளைஞர்களும் மூவரையும் துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.

திருட்டுக்கும்பலைச் சேர்ந்த ஐவரும் மக்களால் கடுமையாக தாக்கப்பட்டு சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வந்த முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.