விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் கிடைக்கவில்லை – அகழ்வுப் பணிகள் நிறுத்தம்

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதும் எதுவித ஆயுதங்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப் பணிகள் கைவிடப்பட்டன.

யாழ்ப்பாணம் கொக்குவில் – பொற்பதி வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

நேற்று (09) காலை 10 மணி அளவில் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற பதிவாளர் தலைமையில் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெர, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் யருள் ஆகியோரின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.

இதன்போது பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நான்கு இடங்களில் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போதும் எதுவித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை.

அகழ்வுப் பணிகள் இடம்பெறும் இடத்திற்கு அருகிலேயே விடுதலைப் புலிகளினுடைய பிரதித் தலைவராக இருந்த மாத்தையாவினுடைய முகாம் மற்றும் விடுதலைப் புலிகளினுடைய சட்ட, மருத்துவக் கல்லூரியும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.