பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகார பகிர்வு கோருவதை ஏன் எதிர்க்கின்றனர்? நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கேள்வி!

பிளவுபடாத நாட்டில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படுவது தொடர்பில் எவரும் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிபர் என்றவகையில் ரணில் விக்ரமசிங்க அரசமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்ற வேண்டியது அவரது பொறுப்பாகும் என குறிப்பிட்ட அவர் பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகார பகிர்வு கோருவதை ஏன் எதிர்க்கின்றனர் என்றும் சபையில் கேள்வியெழுப்பினார்.

அதிபரின் அக்கிராசன உரை மீதான இரண்டாம் நாள் விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்றதுடன் அந்த விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அதிபர் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது வரலாற்றை மீண்டும் திருப்பும் வகையில் ஆயிரக்கணக்கான பெளத்த தேரர்கள் ஓரணியாகத் திரண்டு நாட்டின் அரசியலமைப்பை தீயிட்டு கொளுத்தினர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் சபையில் உரையாற்றும் போது அவரின் உரையில் விரக்தியை காண முடிந்தது. அவரின் தந்தை தர்மலிங்கம் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தியவர். அவர் புலிகளால் கொலை செய்யப்பட்டார். சித்தார்த்தன் ஆயுதம் ஏந்தியவர்தான் ஆனால் அதிகார பரவலாக்கத்திட்டம் நிறைவேற்றப்படும் என்ற அபிலாசையில் ஆயுதத்தை கைவிட்டார்.

அத்துடன் பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வு கோருவதாக சுமந்திரன் எம்.பியும் சபையில் தெரிவித்திருந்தார். அப்படியாயின் இந்த விடயத்தை அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

அன்று வடக்கு, கிழக்கு மாகாணத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுவதை பகிஷ்கரித்தபோது நாம் மாத்திரமே தமிழ் கட்சியாக போட்டியிட்டு எதிர்க்கட்சியாக செயற்பட்டோம். வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையில் முதல் தடவையாக நாம் பிரவேசித்தோம். இணைப்புக்கு எதிரான எதிர்ப்பின் கீழ் நாம் தேர்தலில் போட்டியிட்டோம்.

முஸ்லிம்களுடன் கலந்துரையாடப்படாமலேயே அந்த இணைப்பு மேற்கொள்ளப்பட்டது. அந்த இணைப்பில் 03இல் ஒரு பகுதி தாரைவார்த்துக்கொடுக்கப்பட்டுத்தான் அந்த இணைப்பு மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக வடக்கு கிழக்கு இணைப்பு அரசியலமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் அதற்கு கிடைத்த நியாயமான காரணங்களின் அடிப்படையில் தீர்ப்பளித்தது.

எனவே பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகார பகிர்வை கோரும்போது ஏமாற்றுக்காரர், மோடிக்காரர்கள் என தெரிவிக்கின்றனர். சில கட்சிகள் இந்தியாவையும் குற்றம் சாட்டியிருந்தன. இந்தியா எமது நாட்டுக்கு செய்த பாரியளவிலான மனிதாபிமான உதவிகளை மறந்து இவர்கள் செயற்படுகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.