கனடாவில் நான்கு உயிர்களைக் காப்பாற்றிய சாரதி மோகன்ராஜ்

கடந்த வியாழக்கிழமை (02/02/2023) மாலை ஆறு மணியளவில் ஸ்காபரோவில் ரயில் பாதையில் சிக்கிய கார் ஒன்றில் பயணம் செய்த நான்கு பேரை மீட்ட ரீ.ரீ.சீ பஸ் சாரதி திரு இராசதுரை மோகன்ராஜ் அவர்களுக்குப் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

குறித்த ரயிலானது காரில் மோதுவதற்கு முன்னதாகப் புத்திசாதுரியத்துடன் விரைந்து செயற்பட்டு காரில் சிக்கியிருந்த நான்கு வயோதிபர்களையும் பாதுகாப்பாக குறித்த பணியாளர் மீட்டு வியத்தகு சாதனை புரிந்துள்ளார். ஸ்காபரோவின் பின்ச் அவெனியூ மற்றும் கென்னடி வீதி சந்திப்புக்கு அருகாமையில் இருக்கும் ரயில் கடவையில் பயணித்த போது திடீரென வாகனம் இயங்கவில்லை எனச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களால் தெரிவிக்கப்பட்டது. பின்ச் அவெனியூ வழியாக பஸ்ஸைச் செலுத்தி வந்தபோது ரயில் பாதையில் ஆபத்தான நிலையில் சம்பந்தப்பட்ட காரானது ஸ்தம்பித்து நிற்பதனை அவதானித்த ரீ.ரீ.சீ பஸ் சாரதி மோகன்ராஜ் பஸ்ஸை விட்டு இறங்கிச் சென்று தனது உயிரைப் பணயம் வைத்து காரில் பயணித்த நான்கு பேரையும் மெச்சத்தகு வகையில் மீட்டுள்ளார்.

ரயில் பாதையில் சிக்கிய நான்கு பேரும் காரின் உள்ளே இருப்பது பாதுகாப்பானது என கூறிய போதிலும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தினை விளக்கி அங்கிருந்து வெளியேற்றியுள்ளார்.

குறித்த நான்கு பேரும் காரை விட்டு வெளியேறி வந்து பஸ்ஸில் ஏறி ஐந்து நிமிடங்களில் ரயில் காரில் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நிஜ ஹீரோவாக மாறி நான்கு உயிர்களைக் காப்பாற்றிய துணிகரச் செயல் குறித்து ரீ.ரீ.சீ சேவை டுவிட்டர் மூலம் குறித்த சாரதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளதுடன் அலுவலகத்திற்கு அழைத்துப் பாராட்டுச் சான்றிதழ் ஒன்றினை வழங்கவும் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனது அன்றாடக் கடமையின்;போது தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதனைத் துல்லியமாக அறிந்து வைத்துள்ளமையால் குறித்த நேரத்தில் ரயில் வரக்கூடும் என்பதனை நன்குணர்ந்து சமயோசிதமாகச் சிந்தித்துச் செயலாற்றியுள்ளார் என்பது பாராட்டுக்குரியது.

தான் தனது குடும்பம் என்று குறுகிய வட்டத்துக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் பிறருக்காக உதவும் மனப்புhங்கு உண்மையிலேயே பாhராட்டுதலுக்குரியதே. தன்னோடு தொடர்புடையார் மாட்டு வருவது அன்பு என்றும் தொடர்பில்லாதார் மாட்டு வருவது அருள் என்றும் திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாகவே இல்லறவியலில் அன்புடமை என்ற அதிகாரத்தையும் துறவறவியலில் அருளுடமை என்ற அதிகாரத்தையும் வைத்துள்ளார் போலும். எனது பார்வையில் ஒரு துறவிக்கு இருக்கக்கூடிய மனிதாபிமானம் திரு மோகன்ராஜ் அவர்களுக்கு இருந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல..

மோகன்ராஜ் அவர்கள் சிறுவயது முதல் கல்வியறிவுடன் நல்லொழுக்கமும் ஒருங்கே ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறார் என்ற உண்மை இதிலிருந்து விளங்குகிறது. இவரது தந்தை திரு வேலுப்பிள்ளை இராஜதுரை அவர்களையும் தாயார் திருமதி சுசீலா இராஜதுரை அவர்களையும் நான் நன்கு அறிவேன். மிகச்சிறந்த பண்பாளர்கள். இருவரும் வேலணை கிழக்கில் முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். திரு இராஜதுரை அவர்கள் தென்னிலங்கையில் எகலியக்கொட பிரதேசத்தில் பிரபல வர்த்தகராக இருந்தவர் என்பதனை இங்கு குறிபிட்டேயாகவேண்டும்.

தனது தாய் தந்தையருக்கும் உறவினர் நண்பர்களுக்கும் தான் பிறந்த வேலணை மண்ணிற்கும் கல்விகற்ற பாடசாலைகளான வேலணை சரஸ்வதி வித்தியாசாலைக்கும் வேலணை மத்திய கல்லூரிக்கும் வாழும் கனேடிய மண்ணிற்கும் மெச்சத்தகு செயல்மூலம் பெருமை தேடித்தந்த திரு மோகன்ராஜ் அவர்களைத் தமிழ் சீ என் என் குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.