13என்ற கால்பந்து விளையாட்டை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்துள்ளார்- தயாசிறி ஜயசேகர

13வது திருத்தச்சட்டம் என்ற உதைபந்து விளையாட்டினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்திருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
கடுமையான சூழலில் தேர்தல் ஒன்றிற்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது.வாங்கிய கடனை மீள செலுத்த மாட்டோம் என வெளிநாடுகளுக்கு சொல்லும் காலகட்டம் வந்துள்ளது.
இன்று எமது அரசு அப்படிப்பட்ட ஓர் அரசாக காணப்படுகிறது.கடனை திருப்பி செலுத்த முடியாது என சொல்கின்ற அரசு 75வது சுதந்திர தினத்தை பாரிய செலவுடன் முன்னெடுத்திருக்கின்றது.பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாது என்பது கேலிக்கூத்தான செயற்பாடு.
இது எமது அடையாளம் சார்ந்த பிரச்சனை.
இந்த பிரச்சனையை நாம் அனைவரும் ஒன்றுபட்டு தீர்க்க வேண்டும்.இன ரீதியாக,மத ரீதியாக மக்களை பிரித்துப் பார்க்காத உலக நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எப்போதும் அதிகாரப் பகிர்வுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கும்.
கடந்த 2000ஆம் ஆண்டு அதிகார பகிர்வு சம்பந்தமாக சிறந்த பலமான திட்டம் ஒன்றை முன்வைத்தோம். ஆனால் அன்றைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் அந்த திட்டத்தை எதிர்த்தார்.அந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் பலம் வாய்ந்த நாடாக இன்று முன்னேறியிருப்போம்.
தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களை மீண்டும் பிரித்து வைக்க தயாராகி விட்டார்.
13வது திருத்தச்சட்டம் என்ற விளையாட்டினை ஆரம்பித்து ஒவ்வொருவராக அதனை உதைக்க விட்டுள்ளார்.
நாங்கள் இப்போது தேர்தலை முன்னெடுக்கவுள்ளோம்.
தேர்தலை பிற்போட 20தடவைகளை தடைகளை உருவாக்கியுள்ளனர்.
புதிதாக வாக்குச்சீட்டு அச்சடிக்க பணம் இல்லை என்று சாட்டுச் சொல்கின்றனர்.
இன்னமும் 410மில்லியன் ரூபாய் வாக்குச்சீட்டு அச்சடிக்க தேவைப்படுகிறது.
பணம் இல்லை என்பதே அரசின் ஒரே பதிலாக உள்ளது.ஆனால் சுதந்திரதினம் கொண்டாட 24கோடி இந்த அரசாங்கத்தால் ஒதுக்க முடிந்துள்ளது.
எமது நாட்டின் மாதத்தின் ஒரு நாள் செலவையே தேர்தலுக்காக நாம் கேட்கிறோம்.
தேர்தலை நடத்த ஒரே வழி வீதிக்கு இறங்கி போராடுவது தான்.
எமது கட்சியின் தலைவர் மைத்திரிபால இனவாதம் இல்லாத தலைவர்.அவர் வடக்கில் 95சதவீதமான காணிகளை ஜனாதிபதியாக இருந்த காலத்தில் விடுவித்தார்.
இனவாதம் இல்லாத தலைவருடன் இணைந்து எமது பயணத்தை முன்னெடுப்போம்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.