நோட்டன்பிரிட்ஜ் பஸ் விபத்து – மூவர் பலி – 21 பேர் காயம் – ஐவர் கவலைக்கிடம்

(அந்துவன்)

நல்லதண்ணியிலிருந்து கொழும்பு மஹரகம நோக்கி சிவனொளிபாதமலை யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்ததோடு, 21 பேர் படுங்காயமடைந்ததோடு, ஐவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

நோட்டன்பிரிட்ஜ் கினிகத்தேனை பிரதான வீதியில் நோர்டன்பிரிட்ஜ் டெப்லோ பகுதியில் நேற்று (19.02.2023) இரவு 09.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எதிர்திசையில் இருந்து வந்த மற்றுமொரு பஸ்ஸுக்கு வழிவிட முற்பட்ட போதே குறித்த பஸ் வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதாக நோர்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த யாத்திரிகர்களை இராணுவப் படையினர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

காயமடைந்த  26 பேர் ஆரம்ப சிகிச்சைக்காக வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அவர்களில் 05 பேர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கண்டி மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. காயமடைந்தவர்களில் பஸ் சாரதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் இரு இளம் பெண்கள் (19) இரவு உயிரிழந்ததுடன், பேருந்தில் பயணித்த ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, 20ஆம் திகதி காலை இராணுவப் படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் சேர்ந்து விபத்துக்குள்ளான பேருந்தை சோதனை செய்தனர். இதன்போது காணாமல் போன இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பஸ்ஸுக்கு அடியில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை வட்டவளை பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த இரு யுவதிகளும், ஒரு இளைஞனும் பண்டாரவளை, மஹரகம மற்றும் ஹிக்கடுவ, களுபே ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 26, 28 மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும், யாத்திரிகர்கள் குழு (18ஆம் திகதி) யாத்திரைக்கு வந்திருந்ததாகவும், தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் ஊழியர்கள் குழுவாகும் என நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.