ஜனவரி – ஜூன் மாதம் வரை மனிதாபிமான உதவிகளை வழங்க 4.5 மில்லியன் டொலர் நிதி அவசியம் – உலக உணவுத்திட்டம்

உலக உணவுத்திட்டம் கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள 6 லட்சத்து 36 ஆயிரத்து 125 பேருக்கு அவசியமான உதவிகளை வழங்கியிருப்பதுடன், எதிர்வரும் ஜூன் மாதம் வரையான 6 மாதகாலத்துக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு 45 லட்சம் டொலர் நிதி அவசியமென மதிப்பிட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டின் பொருளாதாரம் இன்னமும் மீட்சியடையாத நிலையில், அதன்விளைவாக உணவுப்பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருகின்றது. அதேவேளை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அமைப்புக்களான உலக உணவுத்திட்டம், உணவு மற்றும் விவசாய அமைப்பு, யுனிசெப் அமைப்பு என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு சர்வதேசப் பொதுக்கட்டமைப்புக்கள் அத்தியாவசிய உதவிகளை வழங்கிவருகின்றன.

அந்த வகையில், இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருப்போருக்குக் கடந்த ஜனவரி மாதம் வரையான காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ள உதவிகள் மற்றும் தேவையான நிதியுதவி என்பன தொடர்பாக உலக உணவுத்திட்டத்தால் வெளியிடப்பட்டுள்ள மாதாந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தரவுகளின் பிரகாரம், இதுவரையான காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு மொத்தமாக 70 லட்சம் டொலர் பெறுமதியான நிதியுதவி வழங்கப்பட்டிருப்பதுடன் 1,069,557 மெட்ரிக் தொன் உணவுப்பொருள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதேவேளை கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் 6 லட்சத்து 36 ஆயிரத்து 125 பேருக்கு அவசியமான அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று கடந்த ஆண்டு ஜுன் மாதம் உலக உணவுத்திட்டத்தின் அவசர உதவி வழங்கல் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தற்போதுவரை 4 லட்சத்து 89 ஆயிரத்து 40 பேருக்கு நிதியுதவியும் 3 லட்சத்து 62 ஆயிரத்து 100 குடும்பங்களுக்கு உணவுப்பொருள்கள்சார் உதவியும் வழங்கப்பட்டுள்ளன. இந்த உதவிகள் மொத்தமாக 14 லட்சம் மக்களைச் சென்றடையவேண்டும் என்பதே உலக உணவுத்திட்டத்தின் இலக்காகும்.

மேலும் நாட்டின் 25 மாவட்டங்களிலுள்ள 15 ஆயிரம் குடும்பங்களை இலக்குவைத்து உணவு மற்றும் விவசாய அமைப்பும் உலக உணவுத்திட்டமும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து உணவுப்பாதுகாப்பு தொடர்பான கூட்டு மதிப்பீடொன்றை முன்னெடுக்கவுள்ளன. அதுமாத்திரமன்றி இந்த வருடம் ஜனவரி முதல் ஜுன் மாதம் வரையான 6 மாதகாலப்பகுதியில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்குரிய உதவிகளை வழங்குவதற்கு 45 லட்சம் டொலர்கள் அவசியமென மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.