இந்திய மீனவர்களை அனுமதித்தால் மீண்டும் மலேரியா தலைதூக்கும் – வடக்கு மீனவர்கள் எச்சரிக்கை

வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதித்தால் நாட்டில் மீண்டும் மலேரியா தலைதூக்கும் ஆபத்தும் இருக்கின்றது என்று மன்னார் மாவட்ட மீனவர் பிரதிநிதி ஆலம் கருத்து வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் –

நாம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்தியத் தரப்புக்களுடன் பலமுறை பேசியுள்ளோம். எமது பசிக்கு உதவும் வகையில் செயற்படும் அதேநேரம் அதனைப் பிடுங்கவும் முற்படுகின்றனர். உதவிக்கு நன்றி கூறும் நாம் அத்துமீறலையும் கண்டிக்கின்றோம்.

இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கினால் இழப்பு வடக்கு மீனவர்களுக்கே ஏற்படும். இதுவரை ஏற்பட்ட இழப்புக்கே உரிய நிவாரணம் இல்லாதபோது இந்திய மீனவர்களை அனுமதிக்கும் திட்டம் யாருடைய நலனுக்கானது?

இந்திய மீனவர்களை வடக்குக் கடலில் மீன்பிடிக்க அனுமதிப்பதன் ஊடாகப் பெறப்படும் பணம் வடக்குக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று கூறப்படுவதை ஒருபோதும் நம்ப முடியாது. ஏனெனில் இதுவரை எதுவுமே அப்படிப் பகிர்ந்தளிக்கப்படவில்லை. இந்தியாவால் வழங்கப்பட்ட அரிசி மட்டுமே எமக்குக் கிடைத்தது.

இந்த அரசும், அமைச்சரும் தமது பொக்கெற்றை நிரப்புவதற்கே முயற்சிக்கின்றனர். இதனால் இலங்கையின் கடலை மட்டுமல்ல தரையையும் இழக்கும் சூழலே ஏற்படும். தற்போது இலங்கையில் மலேரியா இல்லை. இந்தியாவுக்கு வழங்கும் அனுமதி மூலம் மீண்டும் மலேரியா பரவும். இதேநேரம் இனி வரும் காலத்தில் தமிழக மீனவர்களுடன் பேசி இதற்குத் தீர்வு எட்டவே முடியாது.

கச்சத்தீவில் பேச்சு என்பது கடற்றொழில் அமைச்சரின் மாயாஜாலம் என்றே நம்புகின்றோம். இந்திய மத்திய அரசு அல்லது தமிழக அரசுடன் மட்டுமே இனிப் பேச வேண்டும். அதனால் கச்சத்தீவு பேச்சையும் நாம் முற்று முழுதாக நிராகரிக்கின்றோம். – எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.