தேர்தலுக்கான திகதியை வெகுவிரைவில் அறிவிக்க வேண்டும் – கிரியெல்ல

நீதிமன்ற தீர்ப்பிற்கமைய நிதி அமைச்சினால் இனியும் தேர்தலுக்கான நிதியை வழங்காமலிருக்க முடியாது. எனவே தேர்தல் ஆணைக்குழு நீதிமன்ற தீர்ப்பினைப் அடிப்படையாக கொண்டு தேர்தலுக்கான தினத்தை வெகுவிரைவில் அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அரசாங்கத்திடம் நிதி உள்ளது என்பதை எம்மால் காண்பிக்க முடியும். கடந்த ஆண்டை விட இவ்வாண்டு வரி வருமானம் இருமடங்கு அதிகரித்துள்ளது. அதே போன்று அரசாங்கத்தின் வீண் செலவுகளைக் குறைக்கும் பட்சத்தில் பாரியளவு நிதியை சேமிக்க முடியும்.

நாட்டை நிர்வகிக்க முடியவில்லையாயின் ஆட்சியை ஒப்படைத்து விட்டுச் செல்ல வேண்டுமே தவிர , தேர்தலைக் காலம் தாழ்த்தக் கூடாது. சுதந்திரத்தின் பின்னர் எந்தவொரு அரசாங்கமும் நாட்டை வங்குரோத்தடையச் செய்யவில்லை. ஆனால் இந்த அரசாங்கம் சர்வதேசத்திடம் தாம் வங்குரோத்தடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் 15 நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் , அந்த நிபந்தனைகள் குறித்து இதுவரையில் பாராளுமன்றத்திற்கு தெரியப்படுத்தப்படவில்லை. எமது ஆட்சியில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இந்த தீர்மானங்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் தீர்க்கமான உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சித்தால் நாம் சர்வதேசத்தை நாடுவதற்கு தீர்மானித்திருந்தோம். எனினும் அதிஷ்டவசமாக எமது எதிர்பார்ப்பிற்கமைய நீதிமன்ற தீர்ப்பும் அமைந்துள்ளது.

அதற்கமைய நிதி அமைச்சினால் இனியும் நிதியை வழங்க முடியாது எனக் கூறிக் கொண்டிருக்க முடியாது. எனவே தேர்தல் ஆணைக்குழு அதன் சுயாதீனத்தன்மையைப் பயன்படுத்தி வெகுவிரைவில் தேர்தலை நடத்துவதற்கான தினத்தை அறிவிக்க வேண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.