எஸ்.எல். எஸ் தரச்சான்றிதழ் இல்லாமல் டின்மீன்கள் விற்பனை செய்யப்படுமாயின் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு தெரியப்படுத்துங்கள்

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்களில் எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதழ் (SLS) பொறிக்கப்படாமல் சந்தையில் விற்பனை செய்யபடுமாயின் அது குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்களில் எஸ்.எல்.எஸ். தரச்சான்றிதழ் (SLS) இல்லை என பல்வேறு சமூக ஊடகங்கள் மூலம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைவாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்களில் (SLS) தரநிலைச் சின்னம் இல்லாமை தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் அல்லது தகவல்கள் இருப்பின் அதனை நுகர்வோர் அதிகார சபைக்கு அல்லது இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு நேரடியாக அறிவிக்க முடியும்.

நாட்டில் பதிவு செய்யப்பட்ட டின்மீன் உற்பத்தி நிறுவனங்கள் 12 காணப்படுவதுடன், குறித்த நிறுவனங்கள் 33 வகையான வர்த்தகநாமங்களில் உற்பத்திகளை விற்பனை செய்கினறன. மேலும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள டின் மீன் வர்த்தகநாமங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு இலங்கை தர நிர்ணய நிறுவனம் தொடர்ந்து அறிவிக்கும்.

இதற்கு மேலதிகமாக இறக்குமதி செய்யப்படும் டின் மீன் உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அவை உற்பத்தி செய்யும் நாடு குறியீடுகள், குறிப்பிடப்பட்டுள்ளதால் இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களை எளிதில் அடையாளம் காண முடியும்.

இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களுக்கு (SLS) தரச் சான்றிதழ் கட்டாயமில்லை என்றாலும் இறக்குமதி செய்யப்படும் டின் மீன்கள் சுங்க அனுமதிக்கு முன்னர் முறையான தரத்தின் கீழ் உள்ளதா என்பது தொடர்பில் தரநிலைகள் நிறுவகத்தினால் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.