ஜனாதிபதி மக்கள் ஆட்சிக்கு மறுப்புத் தெரிவிப்பாராக இருந்தால் கோட்பாயவிற்கு நடந்தது மிக விரைவில் அவருக்கும் நடக்கும்…

(சுமன்)

நிறைவேற்று அதிகாரத்தினால் நாட்டைச் சர்வாதிகாரப் போக்கில் கொண்டு செல்ல நினைத்தவர்களெல்லாம் மக்களால் துரத்தியடிக்கப்பட்டிருக்கின்றார்கள். தற்போதைய ஜனாதிபதி மக்கள் ஆட்சிக்கு மறுப்புத் தெரிவிப்பாராக இருந்தால் கோட்பாயவிற்கு நடந்தது மிக விரைவில் அவருக்கும் நடக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரளைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவருமான கிருஸ்ணபிள்ளை சேயோன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற வேட்பாளர்களுடனான சந்திப்பின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் நடக்குமா நடக்காத என்பதற்கப்பால் அறிவிக்கப்பட்ட தேர்தலும் பிற்போடப்பட்டிருக்கின்ற இந்த நிலையில் நாங்கள் தொடர்ச்சியாக எமது உறுப்பினர்கள், எமது மக்களின் அபிப்பிராயங்களை அறிவதற்காகவும், எமது கட்சியின் நிலைப்பாடுகளை அறிவிப்பதற்காகவும் எமது செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம். ஏனெனில் இந்த முறை நடைபெற இருக்கின்ற தேர்தல் இலங்கையின் அரசியல் போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்ற, அரசியல் ஒழுங்கில் மாற்றத்தை உருவாக்குகின்ற தேர்தலாகவே அமையும்.

மொட்டின் எழுச்சியை விட மேலாக மொட்டின் வீழ்ச்சி அமைந்திருக்கின்ற இந்த சூழலில் அடுத்து எங்களுடைய அரசியல் நிலைமை எவ்வாறு மாறப் போகின்றது என்கின்ற விடயங்களை அவதானித்துக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற தென்னிலங்கை மக்களுக்கு மத்தியில் எங்களுடைய வடக்கு கிழக்கல் குறிப்பாக நாங்கள் ஒரு அரசியல் நிலைப்பாடடை ஆணித்தரமாக எடுக்க வேண்டும். அதனை எமது தமிழரசுக் கட்சியினூடாக நாங்கள் மேற்கொள்ள வேண்டும் என்கின்ற தோற்றப்பட்டோடு மிகக் கூடுதலான மக்கள் எம்மோடு இணைந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஏனெனில் இன்றிருக்கின்ற இந்த சூழலில் ஒரு ஜனநாயக விரோத செயற்பாட்டை இந்த ஜனாதிபதி செய்கின்ற போக்குகள் இருப்பதன் காரணமாக தற்போது அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைளுக்கான செனற்சபை குழுவானது ஆணித்தரமாகக் கூறியிருக்கின்றது இந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று.  காரணம் என்னவென்றால் இந்த நாட்டில் மாகாணசபைகளினுடைய தேர்தல் பிற்போடப்பட்டு பல வருடங்களாக இருக்கின்றது. ஜனநாயக ரீதியான மக்களாட்சி அங்கே குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கின்றது. இதே ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கும் போது பிற்போடப்பட்ட தேர்தல் தற்போது அவர் ஜனாதிபதியாக இருக்கும் போது கூட எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அதே வகையில் இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை சுயாதீன ஆணைக்குழுவாக இருக்கின்ற தேர்ல்கள் ஆணைக்குழு நடத்த முற்பட்டாலும் அரசாங்கம் இதற்குத் தடைபோட்டுக் கொண்டிருக்கின்றது. இத்தேர்தலில் அரசாங்கத்திற்கு இருக்கின்ற மக்கள் ஆணை வெளியுலகத்திற்கு வந்துவிடும், இதன் மூலமாக அவர்களின் அரசியல் அடிமட்டத்திற்கு வந்துவிடும் என்பதற்காக இவ்வாறான ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்ற நிலைமைகளை அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது.

இந்த நாட்டிலே தற்போது மாகாணசபைகளின் மக்கள் ஆட்சி இல்லை, அதேபோன்று உள்ளுராட்சி மன்றங்களின் மக்கள் ஆட்சி இல்லாதொழிக்கும் நிலை ஏற்படுகின்றது. நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதி வைத்துக் கொண்டு இந்த நாட்டைச் சர்வாதிகாரப் போக்குக்குள் கொண்டு செல்லலாம் என ஜனாதிபதி அவர்கள் நினைக்கின்றார். இவ்வாறு நினைத்தவர்களெலல்லாம் மக்களால் துரத்தியடிக்கப்பட்டிருக்கின்றார்கள். தற்போதைய ஜனாதிபதி மக்கள் ஆட்சிக்கு மறுப்புத் தெரிவிப்பாராக இருந்தால் கோட்பாய ராஜபக்சவிற்கு நடந்தது மிக விரைவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் நடக்கும் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.