குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்த கடற்படையின் உறுப்பினர் ஒருவர் கைது

போரு மூனா என்ற தேடப்படும் கொலைச் சந்தேகத்துக்குரியவருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் கடற்படையின் உறுப்பினர் ஒருவரும் அவருடைய மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரகம பிரதேசத்தில் வசிக்கும் இந்த தம்பதியரையே பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு டிசெம்பர் 18 ஆம் திகதி ஹங்வெல்லவில் வியாபாரத்தளம் ஒன்றின் உரிமையாளரைக் கொன்றது உட்பட 13 கொலைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தேடப்படும் குற்றவாளியான போரு மூனா, கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி விமானம் ஏறுவதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்றிருந்தார்.

அப்போது, குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில், விமான நிலைய பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.

இதன்போது மூன்று பௌத்த பிக்குகள் விமான நிலைய பொலிஸூக்குச் சென்று ‘போரு மூனா’ பற்றி விசாரித்தனர், இதன்போது கைது செய்யப்பட்ட போரு மூனா, அங்கிருந்து தப்பிச் சென்றார்.

எவ்வாறாயினும், ஹங்வெல்ல வியாபாரத்தள உரிமையாளரின் கொலையின் பின்னர், பண்டாரகம, மில்லனிய, மல்வத்த வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் பதுங்கியிருந்தார் என அவர் கைது செய்யப்பட்ட போது வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன்படி, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தவேளையில் குறித்த வீட்டின் தம்பதியினரும் தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்தது.

பின்னர், விரிவான விசாரணைகளை அடுத்து, இருவரும் நுவரெலியாவில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, பொலிஸாரின் பிடியில் இருந்து போரு மூனா தப்பிய சம்பவம் தொடர்பில் இரண்டு பௌத்த பிக்குகள் மற்றும் பொலிஸ் உறுப்பினர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.