புலம்பெயர் உறவுகள் தாயக நினைப்புடனே வாழ்ந்து வருகின்றனர்-தவிசாளர் வாமதேவன் பெருமிதம்.

சாவகச்சேரி
புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் உறவுகள் தம் மக்கள் நினைவோடும்-மண்ணின் நினைவோடுமே வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாக சாவகச்சேரிப் பிரதேசசபைத் தவிசாளர் க.வாமதேவன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தென்மராட்சி-கைதடிப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
அரச உதவிகள் எவையும் கிடைக்காத நிலையிலும் கூட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த புலம்பெயர் உறவுகள் எமது மக்களுக்கு பல்வேறு வகையான உதவித்திட்டங்களை செய்து வருகின்றனர்.
கொரோனா பேரவலம் மற்றும் பொருளாதார நெருக்கடி காலகட்டங்களில் புலம்பெயர் உறவுகள் தாமுண்டு-தம்முடைய வாழ்வுண்டு என வாழாமல் எமது மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியிருந்தனர்.அவர்கள் புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்தாலும் கூட இந்த மண்ணின் நினைவோடும்-மக்களின் நினைவோடுமே வாழ்ந்து வருகின்றனர்.
அரச உதவிகளை விட புலம்பெயர் தேசத்து உதவிகளே எம்மை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன.
கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியன ஏற்பட்ட வேளையில் இங்கு பசியால் ஒருவர் மாண்டார் என்ற செய்திக்கு புலம்பெயர் உறவுகள் இடமளிக்கவில்லை.அந்தளவிற்கு நெருக்கடி வேளையில் உதவிகளைச் செய்தார்கள்.
புலம்பெயர் உறவுகள் தாமும் வளர்ந்து அதேவேளையில் தமது தாய் மண்ணையும் வளர்த்து வருகின்றனர்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.