இலங்கையில் பெண்களை இலக்குவைத்து சைபர் துன்புறுத்தல்கள் ; பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பது தொடர்பாக கரிசனை வெளியாகியுள்ளது.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பது தொடர்பாகக் கவலை வெளியிட்டுள்ளது.

டிஜிற்றல் தளங்களில் பாலின வன்முறைகளைக் கையாள்வதற்கு பயனுள்ள மற்றும் திறமையான முறைப்பாட்டு பொறிமுறைகள் அவசியம் எனத் தெரிவித்துள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு டிஜிற்றலை மையமாகக் கொண்ட பாலின வன்முறை தொடர்பாக விழிப்புணபுர்வை ஏற்படுத்தவேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.

டிஜிற்றல் தளங்களை எவ்வாறு பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் எனவும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் உலகமயமாக்கல் காரணமாக பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மாற்றமடைந்துள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

சர்வதேச பெருந்தொற்று மற்றும் நடமாட்டத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக உலகில் வாழ்க்கை பாரிய விதத்தில் மாற்றமடைந்தது, தொழில்கள் கல்வி மற்றும் சமூக செயற்பாடுகள் மாற்றமடைந்தன எனவும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தொழில்கள் கல்வி மற்றும் சமூக செயற்பாடுகள் ஒன்லைன் டிஜிற்றல் உலகிற்கு மாற்றப்பட்டுள்ளன பெருந்தொற்றுக்குப் பின்னைய பல சமூகங்களில் இணைய வழி கல்வி மற்றும் வீட்டிலிருந்து பணிபுரிதல் என்பது இலங்கை உட்பட பல நாடுகளில் சாதாரணமான விடயங்களாக மாறியுள்ளன என தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இதன் காரணமாக டிஜிற்றல் வெளியை மற்றும் சாதனங்களை பயன்படுத்துவது பல மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் இது பல மடங்கு அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் குடும்பத்தால் ஒரு டிஜிற்றல் சாதனத்தை மாத்திரம் கொள்வனவு செய்யக்கூடிய அல்லது வைத்திருக்கக் கூடிய நிலை காணப்பட்டால் பெண்பிள்ளையை விட ஆண் பிள்ளைக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது எனத் தெரிவித்துள்ள இலங்கையின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பாரபட்ச நம்பிக்கைகளே இதற்குக் காரணம் எனவும் தெரிவித்துள்ளது.

பெண்கள் டிஜிற்றல் சாதனங்களை வலையமைப்பு மற்றும் டேட்டாவை பயன்படுத்துவதில் எதிர்கொள்ளும் மட்டுப்பாடுகள் காரணமாக சர்வதேச அளவில் பெண்கள் மத்தியில் டிஜிற்றல் கல்வியறிவு குறைவாக காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அழுத்தங்களுக்கு உள்ளானவர்கள் பெருந்தொற்றுக்குப் பின்னர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் கணிணி அவசர தயார் நிலை குழு ஆகியவற்றுக்கு அதிகளவு முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர் எனவும் இலங்கையின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் அநேகமாக பெண்களும் சிறுவர்களுமே எனவும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.