நிதி விடுவிப்பு இடைக்காலத் தடையுத்தரவு : செயற்படுத்தலை தற்காலிகமாக இடைநிறுத்துங்கள் – செஹான் சேமசிங்க சிறப்புரிமை குழுவிடம் வலியுறுத்தல்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு நிதி விடுவிப்பு தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடை உத்தரவை செயற்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தும் அறிவித்தல் ஒன்றை நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழு விடுக்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவிடம் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு நிதி விடுப்பு தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடையுத்தரவால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்தே முன்வைத்துள்ள சிறப்புரிமை மீறல் தொடர்பான பிரச்சினையை நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் தொடர்பான குழுவில் விரைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிறப்புரிமை மீறல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சிறப்புரிமை மீறல் தொடர்பான பிரேரணை தொடர்பில் ஒரு தீர்மானத்தை எடுக்கும் வரை நிதி விடுவிப்பு தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடை உத்தரவை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டும். இதற்கான அறிவித்தலை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு அறிவிக்க வேண்டும்.

தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதும், உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்துவதும் எமக்கு நோக்கமல்ல. இருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் போது அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமை எமக்கு உண்டு, ஆகவே நாடாளுமன்ற சிறப்புரிமை குழு ஒரு தீர்மானத்தை அறிவிக்கும் வரை அந்தத் தடையுத்தரவை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.