சாரா ஜாஸ்மினின் மரணம் : சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிக்கை வேண்டும் என்கின்றது கத்தோலிக்க திருச்சபை

கட்டுவாப்பிட்டி தேவாலய குண்டுதாரியின் மனைவியான சாரா ஜாஸ்மினின் மரணம் தொடர்பில் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் மூன்றாவது அறிக்கை அவர்களின் முன்னர் வழங்கிய இரத்த பரிசோதனை அறிக்கைகளுக்கு முரணானது என்பதால் இதனை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் நடந்த சில நாள்களுக்குப் பின்னர் 2019 ஏப்ரல் 26 அன்று சாய்ந்தமருதில் உள்ள வீட்டில் தற்கொலை குண்டு வெடிப்பில் சாரா ஜாஸ்மின் இறந்தார் என இரத்த பரிசோதனை அறிக்கை வெளிப்படுத்தியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இறந்தவர்களில் இல்லை சாரா ஜாஸ்மின் என கூறிய நிலையில் எதை உண்மையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கேள்வியெழுப்பியுள்ளார்.

270 உயிர்களைக் காவு வாங்கிய இந்தத் தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அடையாளம் காண்பது இந்த நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியமானது என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க உண்மை வெளிவர வேண்டும் என்றும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.