அரசியல் மற்றும் மனித உரிமைகள்சார் பிரச்சினைகள் தொடர்பில் கவனத்தைக் குவிக்கப்போவதாக அமெரிக்கத்தூதுவர் தெரிவிப்பு

இலங்கையைப் பொறுத்தமட்டில் தாம் இதுவரையான காலமும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டம் தொடர்பிலேயே அவதானம் செலுத்திவந்ததாகவும், இனிவருங்காலங்களில் மீண்டும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்றவற்றின் ஊடாக அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கம், பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம், மாகாணசபைத்தேர்தல்கள், அதிகாரப்பகிர்வு மற்றும் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விவகாரங்களில் விசேட அவதானம் செலுத்தவிருப்பதாகவும் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்குக்கும் இலங்கையின் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் சிவில் சமூகப்பிரதிநிதிகள் சார்பில் கலாநிதி ஜெஹான் பெரேரா, சட்டத்தரணி பவானி பொன்சேகா மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஷ்ரீன் ஸரூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள், அரசாங்கத்தால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம், அரசாங்கம் ஸ்தாபிப்பதற்குத் திட்டமிட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் அதேவேளை, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவுதல் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது அமெரிக்கத்தூதுவர் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் சிவில் சமூகப்பிரதிநிதிகளின் நிலைப்பாடு என்னவென்பதைக் கேட்டறிந்துகொண்டார்.

எனவே, இதுபற்றி எடுத்துரைத்த சிவில் சமூகப்பிரதிநிதிகள் ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்தை விடவும் இப்புதிய சட்டமூலம் மிகவும் பாரதூரமானது எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேபோன்று தற்போது அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது தொடர்பாகப் பேசிவரும் நிலையில், அண்மையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டமை குறித்து சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்கிடம் தெரிவித்துள்ளனர்.

அதுமாத்திரமன்றி அரசாங்கத்தால் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படும் பட்சத்தில் அதற்குத் தமிழ் அரசியல் கட்சிகளின் இணக்கப்பாடு பெறப்படுவது அவசியம் எனவும், அன்றேல் அந்தப் பொறிமுறைக்கு தமிழ்மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்குப் பதிலளித்த அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் இதுவரையான காலமும் தாம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டம் தொடர்பிலேயே அவதானம் செலுத்திவந்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது அந்தச் செயற்திட்டத்துக்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதால், இனிவருங்காலங்களில் மீண்டும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்றவற்றின் ஊடாக அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கம், மாகாணசபைத்தேர்தல்கள், அதிகாரப்பகிர்வு மற்றும் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.