உத்தேச பயங்கரவாத தடை சட்டமூலம் : அரசுக்கு எதிரான சகல எதிர்ப்புக்களும் பயங்கரவாதமாக கருதப்படும் -ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கம்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடை சட்டமூலம் இலங்கை அரசியல் மற்றும் பாராளுமன்ற வரலாற்றில் பாரதூரமான சட்டமூலமாக கருதப்படுகிறது.அரசாங்கத்தின் விருப்பத்திற்கு அமைய செயற்பட இடமளிக்க முடியாது.

இந்த சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் அரசாங்கத்திற்கு எதிராக சகல எதிர்ப்புக்களும் பயங்கரவாத செயற்பாடாக கருதப்படும் என ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் லால் விஜயநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டின் ஜனநாயகம் கவலைக்குரியதாக உள்ளது.மக்களின் அடிப்படை உரிமைகள், ஜனநாயகத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளோம்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டம் இலங்கை அரசியல் மற்றும் பாராளுமன்ற வரலாற்றில் பாரதூரமான சட்டமூலமாக கருதப்படுகிறது.

1979 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டம் யுத்த சூழல் பின்னணியில் உருவாக்கப்பட்டது.இந்த சட்டத்தில் ஜனநாயகத்தில் பாரதூரமான விடயங்கள் காணப்பட்டாலும் மக்கள் அப்போதைய சூழலை கருத்திற் கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தி;ல் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான எதிர்ப்புகள் வலுப்பெற்றன.

ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் பயங்கரவாத தடைச் சட்டம் இரத்து செய்யப்படும் என 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் சர்வதேசத்திற்கு வாக்குறுதி வழங்கின.

உலக நடப்புக்கு அமைய பயங்கரவாத தடைச்சட்டம் இரத்து செய்யப்படும் என எதிர்பார்த்த சூழலில் தான் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை கேள்விக்குள்ளாக்கும் பல விடயங்களை உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டமூலம்; கொண்டுள்ளது.

இந்த சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் பொலிஸாரின் விருப்பத்தின் அடிப்படையில் ஒருவரை கைது செய்து,நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தாமல் தொடர்ந்து தடுப்பு காவலில் வைக்க முடியும்.

பயங்கரவாதம் என்பதற்கு விரிவான வரைவிலக்கணம் குறிப்பிடப்பட்டுள்ளது,அவ்வாறாயின் அரசாங்கத்திற்கு எதிரான சகல செயற்பாடுகளையும் பயங்கரவாதம் என்று அடையாளப்படுத்த முடியும்.தொழிலாளர்களின் அடிப்படை தொழில் உரிமைகள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும்.

நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு உயர்நீதிமன்றத்திற்கு உண்டு,ஆகவே இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவுடன் உயர்நீதிமன்றத்தை நாடுவோம்.அரசாங்கத்தின் விருப்பத்திற்கு அமைய செயற்பட இடமளிக்க முடியாது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.