உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய அறிக்கை இனங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தும் அபாயம் – மரிக்கார்

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை வர்த்தமானிப்படுத்த முன்னர் அதுதொடர்பில் மீளாய்வு செய்ய மீளாய்வு குழு அமைப்போம்.

அதற்காக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்புவிடுப்போம் என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்யொன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மரிக்கார் எம்.பி. தனது கேள்வியில் குறிப்பிடுகையில் –

உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் அவர்களின் காலம் முடிவடைகிறது.

தற்போது அவர்கள் இதுதொடர்பாக இறுதி அறிக்கையைக் கையளிக்க இருக்கின்றனர். என்றாலும் அவர்களின் அறிக்கையைப் பார்வையிடுமாறு உத்தியோகபூர்வமற்ற முறையில் எமக்கு கிடைத்த அழைப்பின் பேரில் நானும் அதனைப் பார்வையிட்டேன்.

என்றாலும் இதன் மூலம் வரலாற்றுத் தவறு இடம்பெறுவது எமக்கு புலப்பட்டது. அதனால் இந்த அறிக்கை தொடர்பாக மீளாய்வுக் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஏனெனில் குறித்த எல்லை நிர்ணய அறிக்கை இன,மதங்களுக்கிடையில் பிரச்சினை ஏற்படும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை நூற்றுக்கு 50 வீதம் குறைக்குமாறு தெரிவிக்கப்பட்டதும், வட்டாரங்களில் இருந்து நூற்றுக்கு 50 வீதம் தேசியப்பட்டியலில் நூற்றுக்கு 50 வீதம் குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இனங்கள் வாழும் பிரதேசங்களில் இது சிக்கலானது.

அதனால் இதனை சட்டமூலமாக வர்த்தமானிப்படுத்த முன்னர் இதுதொடர்பில் அனைத்து கட்சிகளையும் அழைத்து மீளாய்வு குழுவில் ஆராய்ந்து தவறுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். – என்றார்.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார கூறுகையில் –

வழமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய குழுவின் ஊடாகவே எல்லை நிர்ணய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

ஆனால் இப்போது அதிகாரிகள் குழுவொன்றே அதனைச் செய்துள்ளது. இதனால் மரிக்கார் எம்.பியின் கோரிக்கை போன்று அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய மீளாய்வு குழுவொன்றை அமைக்குமாறு கேட்கின்றேன். – என்றார்.

இதற்கு இராஜாங்க அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில் –

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையில் கோளாறு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதில் உண்மை இருக்கிறது.

அதனால் உள்ளூராட்சி மன்ற எல்லை நிரணய ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை வர்த்தமானிப்படுத்த முன்னர் அதுதொடர்பில் மீளாய்வு செய்ய மீளாய்வு குழு அமைப்போம். அதற்காக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்போம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.