ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின் கீழ் 3,820 தொன் உரம் விவசாய அமைச்சிடம்! 

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின் மூலம், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பால் கொள்வனவு செய்யப்பட்ட 3,820 தொன் யூரியா உரம், நெல் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக  விவசாய அமைச்சிடம், நேற்று (திங்கட்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை, பதுளை, அம்பாறை, மாத்தளை, புத்தளம், குருநாகல் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் அண்மைய பொருளாதார நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள 72 ஆயிரத்து 200 இற்கும் மேற்பட்ட சிறுபோக நெல் விவசாயிகளுக்கு இந்த யூரியா உரம் வழங்கப்படவுள்ளது.

அடையாளம் காணப்பட்ட நெல் உற்பத்தியாளர்களிடையே ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து முகாமைத்துவ மூலோபாயத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் அதேவேளையில் இலங்கையின் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட 1.5 பில்லியன் ரூபா நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்த உரம் வழங்கப்பட்டுள்ளது.

உரத்தை கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் எச்.இ. டெனிஸ் சாய்பி , ‘ அதிகம் பாதிக்கப்படக்கூடிய விவசாயிகளுக்கான யூரியா உரத்தை விநியோகிப்பது இலங்கையில் மில்லியன் கணக்கான மக்களை பாதித்துள்ள சமூக – பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ள பல நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.’ எனக் குறிப்பிட்டார்.

இதன் மூலம் உடனடி உணவுப் பற்றாக்குறையைத் தடுக்க முடியும். அத்தோடு  எதிர்காலத்தில் நிலையான விவசாயத் துறை மாற்றத்துக்கும் இந்த ஒத்துழைப்பு பங்களிக்கும் என்று நம்புகிறோம். இந்தத் திட்டத்தின் மூலம், மேற்குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் அரை ஹெக்டேயர் நிலத்தில் பயிரிடும் தகுதியுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும், 50 கிலோ யூரியா உரம் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.