தேர்தல் ஆணைக்குழு முதுகெழும்பின்றி செயல்படுகிறது – லக்ஷ்மன் கிரியெல்ல

தேர்தல் ஆணைக்குழு கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திலேயே தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கலாம் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சுயாதீனமானதெனக் எனக் கூறினாலும் , ஆணைக்குழு முதுகெழும்பின்றியே செயற்பட்டுக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் இணைவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை. எமக்கு அவ்வாறு அழைப்பு விடுக்கப்படவுமில்லை என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தமது நிபந்தனைகளை செயற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் சிவில் சமூக பிரதிநிதிகளுடனும் கலந்தாலோசிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான நிதியை விடுவிக்குமாறு விடுக்கப்பட்டுள்ள நிபந்தனையையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை.

தமது நிபந்தனைகளை செயற்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக நாணய நிதிய தூதுக்குழுவொன்று எதிர்வரும் ஜூன் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமைக்காக ஜனநாயக மீறல்களுக்கு இடமளிக்க முடியாது.

நாணய நிதியத்துடன் சமூகமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதார சுமைகளை அரசாங்கத்தினால் குறைத்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு எந்த முயற்சிகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

அண்மையில் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டங்களில் பாதுகாப்பு படையினரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கண்ணீர்ப்புகை பிரயோகத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறான நடவடிக்கைகள் ஜூனி;ல் சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு நாட்டுக்கு விஜயம் செய்யும் போது அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

அரசாங்கத்துடன் இணைவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை. எமக்கு அவ்வாறு அழைப்பு விடுக்கப்படவுமில்லை. மக்கள் ஆணையுள்ள அரசாங்கத்திற்கே தம்மால் உதவியளிக்க முடியும் என்று நாணய நிதியம் கடந்த ஆண்டு செப்டெம்பரில் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது நாட்டில் மக்கள் ஆணை சூனியமாகியுள்ளது. நாணய நிதியமும் அது குறித்து தற்போது அவதானம் செலுத்துவதாகத் தெரியவில்லை.

எனவே தான் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துமாறு நாம் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். தேர்தல் ஆணைக்குழு கடந்த ஆண்டு செப்டெம்பரிலேயே தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கலாம் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சுயாதீனமானதெனக் எனக் கூறிக் கொண்டு ஆணைக்குழு முதுகெழும்பின்றியே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.