பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் உள்வாங்கப்படுதல் வேண்டுமாம்!  டயனா கமகே கோரிக்கை

பாலியல் மற்றும் பாலியல் நோய் தொடர்பில் போதிய தெளிவு இல்லாத காரணத்தால் பெரும்பாலான சிறுவர்கள், இளைஞர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள். பாலியல் நோய் என்றால் என்ன? என்பது கூட பெரும்பாலான தரப்பினருக்குத் தெரியாது. ஆகவே நாட்டின் கல்வி முறைமையில் பாலியல் மற்றும் பாலியல் நோய் தொடர்பான கற்கை பாடத்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சபையில் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற  பிள்ளைகளின் ஆரோக்கியம் மற்றும் கல்வி முறைமை தொடர்பான   தனிநபர் பிரேரணை மீதான   விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

பொருளாதாரப் பாதிப்பு மற்றும் ஏனைய காரணிகளால் பிள்ளைகளின் மந்தபோசனை வீதம் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆகவே இது நாட்டின் எதிர்காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பிள்ளைகளின் சுகாதாரம் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டியது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும்.

மாணவர் பருவத்தில் உள்ள சிறுவர்களில் 11 சதவீதமானோர் குடும்ப வறுமை காரணமாக பாடசாலைக் கல்வியில் இருந்து இடை விலகியுள்ளார்கள். ஆகவே, மாணவர்களின் கல்வியைத் தீர்மானிக்கும் ஒரு காரணியாக ஏழ்மை காணப்படுகிறது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

மாணவர்களின் சுகாதாரத்துடன்,பாலியல் கல்வி முறைமை தொடர்பில் நடப்பு நிலைவரத்துக்கு ஏற்ப புதிய கொள்கைகள் வகுக்க வேண்டும். பாலியல் தொடர்பில் போதிய விளக்கம் மற்றும் தெளிவு இல்லாத காரணத்தால் பிள்ளைகள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள். கடந்த காலங்களில் இவ்வாறான பல சம்பவங்கள் நாட்டில் பதிவாகியுள்ளன.

2019 ஆம் ஆண்டு நாட்டில் எய்ட்ஸ் நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. 19 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் தான் அதிகளவில் பாலியல் நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளாகியுள்ளார்கள். நாட்டில் பெரும்பாலானோருக்கு பாலியல் நோய் தொடர்பில் எவ்வித தெளிவும் கிடையாது. ஆகவே பாலியல் மற்றும் பாலியல் நோய் தொடர்பான விடயங்கள்  கல்வி பாடத்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும்.

நாட்டின் கல்வி முறைமையில் கட்டாயம் பாலியல் தொடர்பான தெளிவுபடுத்தல் விடயங்கள் உள்வாங்கப்பட வேண்டும். பாலியல் நோய் தொடர்பில் பெரும்பாலான பிள்ளைகளுக்கு எவ்வித தெளிவும் கிடையாது. இதன் பாரதூரதன்மை அவர்களுக்கு தெரியாது. ஆகவே இதனை மாணவர்களுக்கு நிச்சயம் கற்பிக்க வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.