பயங்கரவாதிகளாக இனிமேல் குரங்குகளை கருதவேண்டும்! நிமல் பியதிஸ்ஸ கிண்டல்

பயிர்செய்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குரங்குகளின் செயற்பாட்டை பயங்கரவாத செயற்பாடாக கருத வேண்டும். நகரம்,கிராமம்,விளை நிலங்கள் அனைத்தையும் குரங்குகள் பயங்கரவாதிகளை போல் ஆக்கிரமித்துள்ளன.

ஆகவே, குரங்குகளை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம் என நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிர்க்கட்சியின் உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ  தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு –

குரங்கு, மயில் உட்பட காட்டு விலங்குகளால் விவசாய பயிர்களுக்கு ஏற்படும் சேதம் பாரதூரமான பிரச்சினையாகக் காணப்படுகிறது.

விவசாயத்துறை வீழ்ச்சியடைவதற்கு இந்த காட்டு விலங்குகள் பிரதான பங்கு வகிக்கின்றன.நகரம்,கிராமம்,உட்பட ஒட்டுமொத்த விளை நிலங்களையும் குரங்குகள் பயங்கரவாதிகளை போல் ஆக்கிரமித்து நாசம் செய்கின்றன.

பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகள்,காட்டு விலங்குகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் போது புலம் பெயர் அமைப்புக்களிடமிருந்து டொலர் பெறும் சுற்றாடல் துறை நிபுணர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரித்துள்ளார்கள். நாட்டில் 70 சதவீதமான விவசாயிகள் உள்ளார்கள்.

குரங்குகளை ஏதாவதொரு வழிமுறையில் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். ஆகவே, டொலருக்காக செயற்படும் சுற்றாடல் நிபுணர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய தேவையில்லை.

கிராமப்புறங்களில் உள்ள தென்னை மரங்கள் உட்பட வீட்டு சுற்றத்தில் உள்ள மரங்களைக் கூட விட்டு வைப்பது இல்லை. கிராமப் புறங்களில் வாழும் மக்கள் இந்த பாரதூர தன்மையை அறிவார்கள். கொழும்பில் குளிர் அறையில் இருந்துக் கொண்டு கருத்து உரைப்பவர்களுக்கு நடைமுறையில் இருக்கும் பிரச்சினை ஏதும் தெரியாது.

ஆகவே, குரங்குகளின் செயற்பாட்டை பயங்கரவாத செயற்பாடாகக் கருதி கடுமையான நடவடிக்கைளை வெகுவிரைவில் எடுக்க வேண்டும்.இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு எதிர்க்கட்சியின் சுயாதீன உறுப்பினர் என்ற அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்குவோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.