ஊழல், மோசடிகள் சட்ட மூலம் அரசுக்கு சார்பானதாக உருவாக்கப்படக் கூடாது! எரான் விக்கிரமரத்ன திட்டவட்டம்

 

ஊழல், மோசடி சட்ட மூலம் அரசாங்கத்துக்கு சார்பானதாக உருவாக்கப்படக் கூடாது. எனவே இதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் சட்டத்தரணிகள் , வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –

நாடு விரைவில் அபிவிருத்தியடைய வேண்டுமெனில் ஊழல் , மோசடிக்கு எதிரான சட்ட மூலம் அவசியமாகும். இது தொடர்பான சட்ட மூலம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், அது அரசாங்கத்துக்கு சார்பாகவே தயாரிக்கப்படவுள்ளது.

உண்மையில் நாட்டில் ஊழல் மோசடிகள் ஒழிக்கப்பட வேண்டுமெனில் ஐக்கிய நாடுகள் சபையுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு சமாந்தரமான சட்ட மூலம் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறான சட்டமே பலம் மிக்கதாகக் காணப்படும்.

அத்தோடு பொலிஸாரால் மாத்திரம் ஊழல் , மோடிசக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. எனவே, இது தொடர்பான நடவடிக்கைகளில் சட்டத்தரணிகள் , வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட துறைசார் நிபுணர்களும் உள்வாங்கப்பட வேண்டும்.

மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு மோசடி செய்யப்படும் தொகைக்கு சமாந்தரமான தண்டப்பணம் அறவிடப்பட வேண்டும் என்பதோடு , 10 வருட சிறை தண்டனையும் வழங்கப்பட வேண்டும். முறையான சட்ட மூலம், அறிமுகப்படுத்தப்பட்டு அது உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.