மக்களின் ஜனநாயகத் தேர்தல் உரிமைகளை பாதுகாக்க அரசுக்கு முடியாமல் போயுள்ளது! ரோஹன ஹெட்டியாரச்சி குற்றச்சாட்டு

 

உளளூராட்சி மன்ற தேர்தலுக்காக கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நீக்குவதற்கான பிரேரணை ஒன்றை சட்ட ரீதியில் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கத்துக்கு முடியுமானாலும் தேர்தலுக்காக இதுவரை செலவிட்ட மக்களின் பணத்தை மீள பெற்றுக்கொடுக்கவோ மக்களுக்கு ஜனநாயகத்தைப் பாதுகாத்துக்கொடுக்கவோ அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கிறது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பாகக் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகக் கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நீக்குவதற்கான பிரேரணை ஒன்றை சட்ட ரீதியில் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கத்துக்கு முடியும். என்றாலும் தேர்தலுக்காக இதுவரை செலவிட்ட ஐந்தாயிரம் லட்சம் ரூபா மக்களின் பணத்தை மீள பெற்றுக்கொடுக்கவோ மக்களுக்கு ஜனநாயகத்தைப் பாதுகாத்துக்கொடுக்கவோ ஆளும் அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கிறது. இருந்தபோதும் அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியும்.

அத்துடன் அரசமைப்புக்கு அமைய நடத்தப்படவேண்டிய தேர்தல் ஒன்றை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிப்பது தேர்தல் திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்காகவா என அரசாங்கத்திடம் கேட்கிறோம். அதேபோன்று முழுமையாக தேர்தல் திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகுவதாக இருந்தால் எல்லை நிர்ணய நடவடிக்கையை ஏன் செய்ய வேண்டும் எனக் கேட்கிறோம்.

மேலும் அரசாங்கம் தற்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகக் கதைத்து வருகிறது. அப்படியானால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த இல்லாத பணம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த எவ்வாறு கிடைக்கிறது?. நாட்டு மக்களின் பணத்தைத் தங்களுக்கு நன்மையாகும் வகையில் தேர்தலுக்காக நினைத்த பிரகாரம் செலவிட முடியுமா? அதனால் அரசியல் அதிகாரம் மற்றும் தங்களின் நன்மைக்காக மாத்திரம் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றமை இன்று தெளிவாகத் தெரிகிறது.

எனவே தேர்தல் நடத்துவது நாடொன்றின் மக்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாத்துக் கொடுப்பதாகும். என்றாலும் அரசாங்கம் தற்போது அந்த உரிமை மற்றும் ஜனநாயகத்தை இல்லாமல் செய்யும் மக்கள் எதிர்ப்பு செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.