ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள் தம்மைத்தாமே காட்டிக்கொடுப்பர்! உண்மைகளை விரைவில் வரும் என்கிறார் பேராயர் கர்தினால்

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை மறைத்து எம்மை ஏமாற்றி விட முடியும் என்று ஆட்சியாளர்கள் எண்ணுகின்றனர்.

ஆனால் மிகக் குறுகிய காலத்துக்குள் இந்தக் குற்றச் செயலுடன் தொடர்புடையவர்கள் ஒருவருக்கொருவர் தம்மைத் தாமே காட்டிக் கொடுத்து உண்மைகளை வெளிப்படுத்துவர் என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

கொச்சிக்கடை புனித அந்தோணியார் திருத்தலத்தின் திருவிழா செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இதன் போது விசேட ஆராதனையின் போது உரை நிகழ்த்துகையிலேயே பேராயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் –

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தத் திருத்தலத்திலும் குண்டு வெடித்ததல்லவா? இதனால் சுமார் 60 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தக் கொலைகளுடன் தொடர்புடையவர்கள் யார்? இது தொடர்பில் ஏதேனும் நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டனவா? உண்மைகளை சரியாகக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

நீதியும் நியாயமும் எங்கே? எம்மை ஏமாற்ற முடியும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு எம்மை ஏமாற்ற முடியாது.

எம்மை ஏமாற்ற நினைப்பவர்களே ஏமாந்து போவர். இந்தத் திருத்தலத்தில் அப்பாவி பொது மக்களைக் கொன்றவர்கள் , அதற்கு ஒத்துழைத்தவர்கள் இன்று சமூகத்தில் சிறந்த இடங்களில் உள்ளனர்.

வெகுவிரைவில் அவர்கள் சமூகத்துக்கு வெளிப்படுத்தப்படுவார்கள். அவர்களுக்குள் தங்களைத் தாங்களே காட்டிக் கொடுத்து உண்மைகளை வெளிப்படுத்துவர்.

அந்த நாள் வரை நாம் காத்துக் கொண்டிருக்கின்றோம். சட்டம் , நீதியைப் பற்றி அமைச்சர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். நாளொன்றுக்கு ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அந்த சட்டங்கள் மூலம் மக்களின் குரல்களை முடக்கி அவர்களை சிறையிலடைத்து இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவே எண்ணுகின்றனர். இடம்பெற்ற அனைத்துக் குற்றங்களையும் மூடி மறைத்துள்ளனர். அவ்வாறு குற்றங்களை முழுமையாக மறைத்து விட முடியாது. இறைவனின் சக்தி அதனை விடப் பலம்மிக்கது.

எனவே நீண்ட காலம் செல்லாமல் இந்த மனிதப்படுகொலைகளுடன் தொடர்புடையவர்களை இனங்காண அந்த இறைவன் எமக்கு உதவுவார் என்று நம்புகின்றோம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.